மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த திருச்சி எம்.பி

மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த திருச்சி எம்.பி

ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், நேற்று (18.12.2024) இரவு 10 மணிக்கு அவரது இல்லத்திற்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. இருமல் சளி காரணமாக உடல் நலன் குன்றி இருக்கும் தலைவர் அவர்களையும் இரவென்றும் பாராமல் தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்துச் சென்றேன். தலைவர் மக்கள் பணி என்றால் இரவு பகல் பார்க்காத மாமனிதர் என்று நாம் அறிந்தது போலவே கடுமையான பனியிலும், இந்த வயதிலும் சில நிமிடங்களில் தயாராகி வந்தார். 

நமக்கும் ஒன்றிய அரசுக்கும் எவ்வளவு பெரிய கொள்கை முரண் இருந்தபோதிலும், எவ்வளவு பெரிய சித்தாந்த எதிர்ப்பு இருந்தாலும் நம் தலைவர் மீது ஒன்றிய அமைச்சர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதையை நேற்றும் நான் கண்கூடாக கண்டுணர்ந்தேன். அந்த மரியாதையை எனது திருச்சி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதற்கு நான் பயன்படுத்த விரும்பினேன், தலைவரும் ஆர்வமோடு ஆமோதித்தார். 

நானும் தலைவர் வைகோ எம்பி அவர்களும் சென்று அமைச்சரை சந்தித்து உரையாடி எனது திருச்சி மக்களின் கீழ்கண்ட இரயில்வே துறை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன்.

கோரிக்கைகளின் விபரம் வருமாறு:- 

01) 1998 முதல் 2016 வரை இந்திய ரயில்வேயில் ICF/தெற்கு இரயில்வே பயிற்சி முடித்த அப்பிரண்டிஸ் (Act Apprentices) வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரிக்கை.

02) திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, கோவிலூர் மற்றும் நந்தவனம் பகுதிகளில் LC 67 மற்றும் LC 68 (மூடப்பட்டவை) இடையே சாலை இணைக்குமாறு கோரிக்கை.

03) திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள LC 244/A கேட் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை.

04) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் பேரூராட்சி ஒன்றியம், இனம்குளத்தூர் பகுதியில் அமைந்துள்ள எல்.சி 265 இன் இடத்தில் ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டுகோள்.

05) COVID தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப்போல சமுத்திரம் இரயில் நிலையத்தில் இரயில்கள் நிற்க வேண்டுகோள்.

06) எம்.கே கோட்டை மஞ்சத்திடல் கம்பி கேட் பகுதியில் சுரங்கப்பாதைக்கு பதிலாக ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டுகோள்.

07) திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் மேலக்குமரேசபுரம் பகுதியில் எல்.சி 317/ஈ கேட் இடத்தில் ஆர்.ஓ.பி கட்ட அனுமதி அளிக்க வேண்டுகோள்.

08) திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில்கள் நிற்க வேண்டுகோள். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் எனது கடிதங்களை அமைச்சரிடம் கொடுக்கும்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் 5,42,213 நம்பிக்கைகளை வாக்குகளாக பெற்று வென்ற நான், திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலனுக்கு பாடுபடுவதே முதன்மை நோக்கமாக கருதி செயலாற்றி வருகிறேன். இந்த கோரிக்கைகளில் சில கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருச்சி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது என்பதையும் அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி இந்த கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை விளக்கினேன். 

கோரிக்கை கடிதங்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், பரிசீலித்து விட்டு, நிச்சயம் நிறைவேற்றித்தருவதாக கூறினார். அமைச்சரிடம் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டபோது, தலைவரையும், என்னையும் அழைத்து, உபசரித்து விடைகொடுத்து அனுப்பி வைத்தார் அமைச்சர். திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் என்று நம்பிக்கையோடு புறப்பட்டு வந்தேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision