திருச்சியில் இரண்டு புதிய காவல் நிலையங்கள்?

திருச்சியில் இரண்டு புதிய காவல் நிலையங்கள்?

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட பின்னர், கடந்த (01.06.1997)-ம் ஆண்டு திருச்சி மாநகர காவல்துறை தோற்றுவிக்கப்பட்டது. தற்போது திருச்சி மாநகர காவல்துறை வடக்கு, தெற்கு என 2 மண்டலமாக பிரிக்கப்பட்டு கண்டோன்மெண்ட், கே.கே.நகர், பொன்மலை, காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம், தில்லைநகர் ஆகிய 6 காவல் சரகங்களை கொண்டுள்ளது. இதில் 14 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் போலீஸ்நிலையங்கள் உள்ளன. இதுதவிர ஆயுதப்படை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மாநகர குற்றப்பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப்பரிவு, மாநகர சைபர் கிரைம் என்று 17 வகையான பிரிவுகள் இயங்கி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி மாநகர காவல் எல்லை 2 புதிய காவல் நிலையங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்காக திருச்சி மாநகரில் உறையூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளை பிரித்தும், திருச்சி மாவட்ட காவல்துறையில் சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்தில் சில பகுதிகளை பிரித்தும் "உய்யகொண்டான் திருமலை" என்ற புதிய போலீஸ் நிலையம் தோற்றுவிக்கப்பட உள்ளது. இந்த புதிய போலீஸ் நிலையத்தில் சண்முகாநகர் முழுவதும், எம்.எம்.நகர், ரெங்காநகர், வாசன்வேலி மற்றும் மல்லியம்பத்து ஊராட்சி, நாச்சிகுறிச்சி ஊராட்சி, மேலத்தெரு, கொடாப்பு ஆகிய பகுதிகள் உள்ளடங்கி இருக்கும். மேலும் இந்த போலீஸ் நிலையத்துக்கு காவல் ஆய்வாளர் ஒருவர், உதவி காவல் ஆய்வாளர் 2 பேர், தலைமை காவலர்கள் 10 பேர், முதல் நிலை காவலர்கள் 15 பேர், 2-ம் நிலை காவலர்கள் 20 பேர் என்று 48 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.

இதற்கான கருத்துரு கடந்த 2021-ம் ஆண்டே அனுப்பப்பட்டு 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை மையமாக கொண்டு பஞ்சப்பூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு அமைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஆண்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக 1 ஏக்கர் நிலமும் தயாராக உள்ளது. அதுபோல் உய்யகொண்டான் திருமலை காவல் நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப திருச்சி மாநகர காவல்துறையை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் தாக்கல் செய்ய உள்ள தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாநகர காவல்துறையில் புதிய இரு காவல் நிலையங்கள் புதிதாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினரும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision