திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஏன்? - பரபரப்பு

திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஏன்? - பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் முத்தரசு (54). இவர் திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளர் பணியாற்றினார். அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. பின்னர் முத்தரசு திருநெல்வேலி மாவட்ட ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக சில மாதங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நெல்லையிலிருந்து பணி மாறுதலாகி மீண்டும் திருச்சியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக ஒரு மாதத்திற்கு முன் பதவி ஏற்றார். இதற்கிடையே அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு மீண்டும் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் இன்று திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய் சிட்டியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் முத்தரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமச்சந்திரா தலைமையிலான 5 பேர் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் தஞ்சாவூர் நாஞ்சி கோட்டையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளர் வீட்டில் நடைபெறும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision