பெண்மையை போற்றும் மகளிர் தினம்!!
உலகம் முழுவதும் மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 இன்று கொண்டாடப்படுகிறது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் போன்றவற்றில் பெண்கள் அடைந்துள்ள வெற்றியை இந்த நாள் நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை மீட்டு தந்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. வெறும் கொண்டாட்டங்களுடனும் வாழ்த்துகளுடனும் நின்று விடாமல் சிறுமிகள் மற்றும் பெண்கள் நலன் கருதும் சில புதிய சிந்தனைகளையும் முன் வைப்போம்.
இலவச அழைப்பு மையம் : `காவலன்’ போன்ற செயலிகள் பெண்கள் பாதுகாப்புக்காகக் கொண்டு வரப்பட்டாலும், ஆபத்துக் காலத்திலேயே அதை நாடுகிறோம். மேலும், காவல் நிலையம் என்றால் சிலர் தயங்கவும் செய்யலாம். ஆதலால், ஒரு இலவச அழைப்பு மையம் (CALLCENTRE) சேவையை உருவாக்கி அதன் மூலம் வெவ்வேறான புகார்களை திரட்டி அரசாங்கமே காவல்துறை நடவடிக்கைக்கு அதை அனுப்பலாம்.
உதாரணமாக, நீண்ட காலம் பின் தொடரும் அல்லது தொல்லை கொடுப்பவர் பற்றியோ, பள்ளியிலோ, பணியிடத்திலோ நடமாடும் கயவர்கள் பற்றியோ, பின் தொடரும் சந்தேகத்துக்குரிய நபர் பற்றியோ, பொதுவெளிகளில் பெண்கள் முன்பு தவறாக நடந்துகொள்ளும் நபர்பற்றியோ, பேருந்து நிலையம், கல்லூரி/பள்ளி வாசல் முன்பு கிண்டல் செய்யும் ரோமியோக்கள் பற்றியோ புகார் தெரிவிக்கலாம். அவை பரிசீலனை செய்யப்பட்டு காவல் துறையின் மறைமுக நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது அரசாங்கமே ஆவண செய்ய முற்படலாம்.
தற்காப்பு பயிற்சி : ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்போது மட்டும் பெண் பிள்ளைகள் பாதுகாப்பு பற்றி ஆவேசத்துடன் அக்கறைப்படாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கான விடைகள் பற்றி சிறிது யோசிக்க முயல்வோம். கடந்த காலங்களில் பெண் பிள்ளைகளை படிக்க பள்ளிக்கு அழைத்து வந்தோம். பாடங்கள் தாண்டி வெளியுலகம் பார்த்திட வழிவகை செய்து கொடுத்தோம். அந்தப் பள்ளிக்கூடங்களில் வாரம் நாற்பது மணி நேரம் தோராயமாக செலவழிக்கிறார்கள். அதில் ஒரு மணி நேரம் பெண் பிள்ளை பாதுகாப்பு வகுப்பாக மாற்றி பெண்களுக்குத் தேவையான தற்காப்புப் பயிற்சி, சவால்களை எதிர்கொள்ளும் பயன்பாட்டு வழக்குகள் - அதைப் பற்றிய அறிவு (USECASES) மற்றும் எதிர் பாலினத்தவரை கையாளும் உளவியல் கலைகளை மாணவியருக்கு வழங்கலாம்.
அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை சட்டங்கள் : பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு), 2013 : இந்தச் சட்டத்தின்படி, பணியிடத்தில் ஐந்து வகையான நடத்தைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படுகின்றன. உடல் ரீதியான தொடர்பு, பாலியல் விருப்பங்களுக்கான கோரிக்கை அல்லது பாலினவாத கருத்துக்களை பேசுதல், ஆபாச படங்களை காட்டுதல் மற்றும் விரும்பத்தகாத உடல், வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத பாலியல் நடத்தை ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுகிறது.
குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை : இந்தியாவில் வகுக்கப்பட்ட சட்டங்களிலேயே படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடின்றி பெண்கள் அனைவருக்கும் உபயோகமாகக்கூடிய சட்டம் இதுவே. 2005 ஆம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் மூலம் குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமையைப் பெற ஒவ்வொரு பெண்ணும் உரிமை பெற்றனர். குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான துஷ்பிரயோகம் மட்டுமின்றி மன, பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்கியது.
கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம், 1971 : இந்தியாவில் கருக்கலைப்பை சில நேரங்களில் சட்ட ரீதியாக செய்யலாம் . கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம் 1971 படி., சட்டரீதியான கருக்கலைப்புகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே செய்யப்படுகின்றன. கர்ப்பத்தின் தொடர்ச்சியானது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் அல்லது மன ஆரோக்கியத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் ஏதேனும் கடுமையான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு உள்ளிட்டவை காரணமாக உருவாகும் கர்ப்பங்களை கலைக்க உதவுகிறது.
சம ஊதிய சட்டம், 1976 : உலகம் முழுவதும் ஊதிய ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கூலி வேலையில் தொடங்கி பல்வேறு வேலைகளிலும் இந்த ஊதிய பிரச்சனைகள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தன்று மட்டும் பெண்களை கொண்டாடாமல் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் அளிப்பதே அவர்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசாகும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO