தெரு நாய் தொல்லை - போதை பொருள் விற்பனை அதிகரிப்பு - திமுக, அதிமுக புகார்

தெரு நாய் தொல்லை - போதை பொருள் விற்பனை அதிகரிப்பு - திமுக, அதிமுக புகார்

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மேயர் அன்பழகன் கூறுகையில்.... திருச்சி மாநகராட்சி சிறப்பாக செயல்படுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு திட்டங்களை திருச்சி மாநகரத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இந்த மாநகராட்சியின் சிறப்பான பணிகளை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த கமிஷனர், அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய மார்க்கெட் போன்றவை அமையும் பொழுது திருச்சி மாநகராட்சி மிகப்பெரிய வளர்ச்சி பெறும் அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே திருச்சி மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக வருவதற்கு வழிவக்கும் என தெரிவித்தார்.

   

கவுன்சிலர் ரெக்ஸ் (காங்) பேசிய போது..... எனது 39-வது வார்டில் தற்பொழுதுதான் பாதாள சாக்கடை பணி முடிவுற்று தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் சேதப்படுத்தும் விதமாக எரிவாயு வீட்டிணைப்பு திட்டம் அமையவுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியபின், மக்கள் ஏற்றுக்கொண்டால் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்.

கவுன்சிலர் சுரேஷ் (இ.கம்யுஸ்ட்) பேசிய போது..... விரைவில் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் அந்த பகுதியில் உள்ள தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் அம்பிகாபதி (அதிமுக) பேசிய போது.... திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மட்டுமின்றி மாநகர் பகுதி முழுவதும் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடைகளில் தாராளமாக விற்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் கமால் முஸ்தபா ( தி.மு.க.) பேசிய போது.... எனது வார்டுக்கு உட்பட்ட குழுமிக்கரை சாலையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பலூர் சின்னசாமி மற்றும் விராலிமலை சண்முகம் நினைவிடத்தை நினைவு மண்டபமாக புதுப்பிக்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் தமிழக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவுன்சிலர் பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) உறுப்பினர் பேசிய போது.... எனது வார்டில் சமுதாயம் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

கவுன்சிலர் ராமதாஸ் (திமுக) பேசிய போது.... எனது வார்டில் 2 பள்ளி குழந்தைகளை நாய் கடித்து விட்டது. இது தொடர்பாக மேயர், கமிஷனரிடம் புகார் கூறியுள்ளேன். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.

இதற்கு கமிஷனர் வைத்திலிங்கம் பதிலளித்த போது.... நாய்களை பிடிப்பதில் மாநகராட்சி ஓரளவுக்கு தான் நடவடிக்கை எடுக்க முடியும். தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அங்கேயே விட்டு விட வேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. அதனால் நாம் அதனை வேறு இடத்தில் கொண்டு போய் தங்க வைக்க முடியாது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision