திருச்சி மாவட்த்தில் 18,798 பேர் குரூப் 4 தேர்வு எழுதவில்லை

திருச்சி மாவட்த்தில் 18,798 பேர் குரூப் 4 தேர்வு எழுதவில்லை

தமிழ்நாடு முழுவதும் குரூப் 4-ல் கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியிட்டது.

இதற்கான தேர்வு இன்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 301 தேர்வு மையங்களில் 85,747 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வு பணிகளுக்கென 301 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் உள்ளிட்ட தேர்வு பொருட்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 100 இயங்கு குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டது.

இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 11 பறக்கும் படை(Flying Squad) அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு மையத்தினை கண்காணித்திட 301 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, முசிறி, ஸ்ரீரங்கம்,,தொட்டியம், துறையூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரம்பூர் ஆகிய வட்டங்களில் 301 தேர்வு மையங்களில் 66 ஆயிரத்து 949 பேர் தேர்வு எழுதினர். 18 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் இன்று (09.06.2024) தமிழ்நாடு அரசு பணியாளர் தொகுதி 4 தேர்வு நடைபெற்ற சேவா சங்கம் பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision