காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் - சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
திருச்சி கண்டோன்ட்மெண்ட் பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளியில் (ஆர்.சி) பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில், 10 பேர் அரையாண்டு இறுதித்தேர்வு முடித்துவிட்டு, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்றனர்.
படித்துறையில் குறைந்தளவு நீர் சென்றதால், அவர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர். அப்போது தெர்மகோல் மீது படுத்துக் கொண்டு சிலர் விளையாடினர். நீரின் வேகம் அதிகரித்ததால், 2 பேர் நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மற்றொரு மாணவன் முயற்சித்தார். அவரும் நீரில் சிக்கிக் கொண்டார்.
ஓரளவு நீச்சல் தெரிந்த எடமலைப்பட்டி புதூர் அருண்சஞ்சய் (16), தருண் (15), தர்மநாதபுரம் சே.பெர்னல் இமானுவேல் (15), கல்லுக்குழி வா.திருமுருகன் (16), ரா.ஹரிஹரன் (15), காஜாப்பேட்டை ஆ.நத்தானியல் (15), ஆ.சரவணன் ஆகிய, 7 மாணவர்கள் தட்டுத்தடுமாறி நீச்சலடித்து கரை வந்து சேர்ந்தனர்.
ஆனால், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த சலீம் மகன் ஜாகிர் உசேன் (15), பீமநகரை சேர்ந்த செந்தில் மகன் விக்னேஷ் (16), எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிம்பு (15) ஆகியோர் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், 30க்கும் மேற்பட்டோர் மாணவர்களை மீட்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி வரை ஈடுபட்டனர்.
அப்பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருந்ததாலும், நீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரமானதாலும் தேடுதல் பணியை கைவிட்டனர். இதற்கிடையே, மாணவர்கள் தேடும் பணிக்காக முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காலை, 6 மணியிலிருந்து தேடுதல் பணியை தீயணைப்புத்துறையினர் தொடங்கினர்.
காலை, 7 மணியளவில் ஜாகிர் உசேன் உடலை மீட்புப் படை வீரர்கள் மீட்டனர். தொடர்ந்து மற்ற, 2 மாணவர்களின் உடல்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வந்தது. மாலை, 4.15 மணியளவில், சிம்புவின் உடலை, 700 மீட்டர் தொலைவில், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி பாலம் அருகேயிருந்து மீட்டனர். மாணவர்களின் உடல்களைப் பார்த்து பெற்றோர், உறவினர் கதறியழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கின.
மீட்கப்பட்ட, 2 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விக்னேஷ் என்ற மாணவனின் உடலை, ஓடத்துறை ரயில்வே பாலம் அடியில் தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டனர். பின்னர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிம்பு, விக்னேஷ் ஆகியோரின் உடல்கள், திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision