திருச்சியில் மீன் வியாபாரி கொலை - 4 தனிப்படைகள் அமைப்பு

திருச்சியில் மீன் வியாபாரி கொலை -  4 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி மாநகரம், உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காசிவிளங்கி மீன் மார்கெட்டிற்கு இன்று நள்ளிரவு 02:00 மணிக்கு ராமராஜ் (26) த.பெ.விஸ்வநாதன், எண்.5/14 திருநகர் பழைய பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் மாவட்டம் என்பவர் மீன் விற்பனையாளர் என்பதால், மொத்தமாக மீன் வாங்குவதற்காக தனது Hyundai காரில் தனது மீன்கடையில் வேலை பார்க்கும் மூன்று நபர்களுடன் வந்துள்ளார்.

மேற்படி மீன்மார்க்கெட்டில் மீன் வாங்கிகொண்டு அவர் வந்த காருக்கு திரும்பி வரும்பொழுது, அதிகாலை 04:15 மணிக்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மீன் மார்க்கெட் எதிரே உள்ள கண்ணாடி கடை அருகில் மேற்படி ராமராஜ் என்பவரை அரிவாளால் பின் தலையில் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எதிரிகள் அனைவரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

மேற்படி இறந்து போன ராமராஜ், என்பவர் மீது பெரம்பலூர் மாவட்டம் டவுன் காவல்நிலையத்தில் முன்விரோதம் காரணமாக பெரம்பலூரைச்சேர்ந்த செங்குட்டுவேல் என்பவரை கடந்த 25.03.2021-ம் தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே இறந்து போன ராமராஜ், அவரது சகோதரர் சிவா மற்றும் இரண்டு நண்பர்களான அறிவழகன் மற்றும் சண்முகம் ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி செங்குட்டுவேலின் கொலைக்கு பழி வாங்கும் விதமாக செங்குட்டுவேலின் உறவினர்கள் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெரம்பலூரிலிருந்து பின்தொடர்ந்து வந்து திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் அருகில் கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இறந்து போன ராமராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, கொலை நடந்த சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தும், இந்த கொலை வழக்கின் எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision