திருச்சியில் 48.10 கோடி மதிப்பீட்டில் ஐடி பார்க் - முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.
Advertisement
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்கள் தமிழகத்தினை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான திருச்சி கோயமுத்தூர் மதுரை திருநெல்வேலி சேலம் ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில் தொழில்முனைவோருக்கு, தகவல் தொழில்நுட்பம் அதனை சார்ந்த வணிகத்தைத் தொடங்க ஏதுவாக திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 2 தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் கட்டப்படும் என அறிவித்தார்.
Advertisement
அதன்படி தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டம், நாவல்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிதாகக் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும் என்றும், இப்பூங்கா முழுமையாகச் செயல்படும்போது, சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்".
என தமிழக அரசு தெரிவித்துள்ளது.