5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்டபு - எஸ்பி-யிடம் ஒப்படைப்பு

5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்டபு - எஸ்பி-யிடம் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (32). இவர் திருமணமாகாத நிலையில் தகாத உறவின் மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிறந்து 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த 2022 செப்டம்பர் 23ம் தேதி விற்பனை செய்தனர்.

குழந்தையை கடத்திச் சென்றதாக நாடகமாடிய குழந்தையின் தாய் ஜானகி, அவரது வழக்கறிஞர் பிரபு, இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா ஆகிய 4 பேரை லால்குடி போலீஸார் ஜனவரி 8 ம் தேதி கைதாகினர். இதைத்தொடர்ந்து, லால்குடி  துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயணி விசாரணை நடத்திய நிலையில், டி.எஸ்.பி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஜானகியின் குழந்தை என்ன ஆனது என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து சண்முகபிரியாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் ஜானகியின் குழந்தை புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை மீட்பதற்காக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் புதுடெல்லி சென்று முகாமிட்டு குழந்தையை பற்றி ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுடெல்லியை சேர்ந்த கோபிநாத் என்கிற கோபிகிருஷ்ணன் என்பவரிடம் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் வெள்ளகவி மாவட்டம் உத்யம்பாக் போலீஸ் சரகம் ஜன்னமா நகரை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் அந்த குழந்தையை கர்நாடகாவில் இருந்து மீட்டு கார் மூலம் திருச்சி கொண்டு வந்தனர்.

பின்னர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த பெண் குழந்தையை திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைத்தார். நாளை மறுநாள் திங்கட்கிழமை(23.01.2023) அந்த குழந்தை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் என கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn