திருச்சியில் 5000 வண்ணத்துப்பூச்சிகள் - கணக்கெடுக்கும் போது மாணவர்கள் வியப்பு
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்குடனும், தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு மற்றும் அறிவுக்கு விருந்தளிக்கும் வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் காவிரிக்கரை பகுதியில் 10 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 8.67கோடி மதிப்பீட்டில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது.
உயிர் சூழல் மண்டலத்தில் வண்ணத்துப்பூச்சி முக்கிய இடத்தை வகிப்பதால் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வண்ணத்துப்பூச்சிக்களையும் அங்குள்ள இயற்கை சூழலையும் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர். பனி மற்றும் கோடை காலம் தொடங்கி விட்டதால், வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வண்ணத்துப்பூச்சிகள் மாதம் என்பார்கள். இம்மாதத்தில் இந்தியா முழுவதும் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மேற்பார்வையில் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் திருச்சியிலுள்ள 4 கல்லூரிகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகை தந்து வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். வண்ணத்துப்பூச்சிகளின் அழகையும் கண்டு ரசித்தவாறு தாவரங்களின் வகைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் வகைகளையும் அவர்கள் கணக்கெடுத்தனர்.
உணவு சூழலுக்கு வண்ணத்துப்பூச்சிகள் மிகவும் இன்றியமையாதது. எனவே வண்ணத்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக ஆங்காங்கே செடிகள் நட வேண்டும், பூங்காக்கள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மேலும் கடந்த ஆண்டை பொறுத்தவரை 129 வண்ணத்துப்பூச்சி ரகங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 100 வண்ணத்துப்பூச்சி வகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் 5000க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் கணககெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
பல வகையான பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகளை பார்க்கும் பொழுது மாணவிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அப்பொழுது மாணவர்கள் தாங்கள் கணக்கெடுப்பதையே மறந்து வண்ணத்துப்பூச்சியின் அழகை கண்டு ரசித்ததாகவும், வண்ணத்துப்பூச்சியின் வெவ்வேறு பெயர்களை கேட்கும் பொழுது உற்சாகத்தில் ஆழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision