77வது சுதந்திர தின கொண்டாட்டம்-ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை
திருச்சி கல்லுக்குழி இரயில்வே மைதானத்தில் இரயில்வே பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, தென்னக இரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து எம்.எஸ்.அன்பழகன் சுதந்திர தின உரையாற்றுகையில்...
வருவாய் அதிகரிப்பு : தென்னக ரயில்வே கடந்த நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அதிக வருவாய் ஈட்டியுள்ளது. 80விழுக்காட்டில் இருந்து 89விழுக்காடாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு. அதேபோல சரக்குகளை கையாளும் முணையத்தில் 24% கூடுதலாக சரக்குகளை கையாண்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கையும் 9% அதிகரித்துள்ளது.
நேரம் தவறாமை : தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்டு இயங்கப்படும் இரயில்கள் கடந்தாண்டு 88 விழுக்காடு நேரம் தவறாமல் இயக்கப்பட்டது. அது இந்தாண்டு 92.5 விழுக்காடு சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டுள்ளது.
இரயில்களின் வேகம் அதிகரிப்பு : தென்னக ரயில்வேக்கு உட்பட்ட 2037 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்திலும், 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் 130 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
மேம்படுத்தப்படும் இரயில் நிலையம் : அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவடையும். இதில் 21 முக்கிய ரயில் நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளும் நடந்து வருகிறது.
குற்றங்கள் தடுப்பு : ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான உடைமைகளை திருடிய 634 நபர்களையும், பயணிகளின் உடைமைகளை திருடிய 300 நபர்களையும், வெடி பொருட்கள், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள்,ஹவாலா பணம் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட 300 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இரயில் பயணத்தின் போது வழி தவறிய 2 ஆயிரத்து 205 குழந்தைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இரயில் பயணத்தின் போது விபத்தில் சிக்கிய 64 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி உள்ளனர். ரயில் பயணிகள் தவறவிட்ட உடைமைகள் குறித்து 4ஆயிரத்து 470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயணத்தின் போது பயணிகளை தொந்தரவு செய்த 416 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.
கௌரவித்தல் : பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய மீனா, தமயந்தி, சிவக்குமார், ஸ்ருதி ராஜ் ஆகியோரை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தமிழுக்கு பணிந்த மோப்பநாய் : வெடிபொருள்களை கண்டறிவது உள்ளிட்ட புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும் மேக்ஸ், டான், ராக்கி என்ற மூன்று மோப்பநாய்கள் தங்களது திறமையை மைதானத்தில் வெளிப்படுத்தியது. இதன் பயிற்சியாளர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கொடுத்த கட்டளையை மட்டும் ஏற்று செயல்பட்டுவந்த மோப்பநாய்கள், இன்று தமிழ் மொழியில் கொடுக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடந்துக்கொண்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது. பின்னர், புல்லட் வீரர்கள், இரயில்வே பாதுகாப்பு படை பெண் வீராங்கனைகள் அதிநவீ ன துப்பாக்கிகளை கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision