திருச்சி அருகே சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு

திருச்சி அருகே சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு இன்று நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரன், மதுரைவீரன், வெடிகார குள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பக்தர்கள் தீபம் ஏற்று வழிபட்டனர். கோவில் வளாகத்தை சுற்றிலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் வாண வேடிக்கையுடன் அருகில் உள்ள காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர். அப்போது கோவிலை சேர்ந்த சேர்வைக்காரர்கள் பூசாரிகள் தப்பு அடித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. 

அந்த சமயத்தில் காட்டு கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடிகளை அவிழ்த்து கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கோவில் பூசாரி பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்தும், விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர். 

இந்த அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி, சூனியம் பேய் பிடித்தல் ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision