திருச்சி அருகே விபத்து - வேனில் சிக்கிய 2 பெண்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்பு

திருச்சி அருகே விபத்து - வேனில் சிக்கிய 2 பெண்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்பு

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே உள்ள அரூர் பாப்பாத்தி அம்மன் குலதெய்வ கோயிலுக்கு லோடு வேனில் துறையூர், பாண்டமங்கலம், பாலசமுத்திரம், ஆகிய பகுதியில் இருந்து 9 பேர் சுவாமி கும்பிட்டு விட்டு பின்னர் லோடு  ஆட்டோவில் புறப்பட்டு சென்றுள்ளனர். துறையூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வேனை ஓட்டி வந்தார்.

அப்போது காட்டுப்புத்தூர் பாலபுரம் அருகே வந்த லோடு வேன் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் துறையூர் பகுதியை சேர்ந்த முருகப்பன் மனைவி கவிதா (44), மகன் அபிஷேக் (15), ஈஸ்வரன் மகன் ரூபன் (11), ரங்கநாதன் மனைவி சாந்தி (50), பாண்டமங்கலம் முருகேசன் மகன் சக்திவேல் (17), மகள்கள் கோபிகா (16), மதுமிதா (17) பாலசமுத்திரம் நடேசன் மனைவி பாலாமணி (62) ஆகியோர் காயமடைந்தனர்.

இதில் கோபிகா, மதுமிதா ஆகியோர் ஆட்டோவின் முன்பக்கத்தில் அமர்ந்து சென்றதால் விபத்தில் இருவரது கால்களும் உள்ளே மாட்டி கொண்டது. விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்தனர். மேலும் சுவாசிக்க முடியாமல் சிறுமிகள் திணறியதால் அவர்களுக்கு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ஆக்சிஜன் வைத்து உதவினர். பின்னர் முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து வந்து  பொதுமக்கள் உதவியுடன் லோடு வேனின் ஒரு பகுதியை வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி எடுத்து சிறுமிகளை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுமிகள் இருவரையும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் காயம் அடைந்த டிரைவர் ஈஸ்வரன் உள்பட மற்றவர்களை காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision