நடிகர் விஜய் அரசியல் பயணம் - திருச்சியில் அமைச்சர் பேட்டி
திருச்சிராப்பள்ளி, கலையரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (17.06.2023) வழங்கி பாராட்டினார்கள்.
முதலமைச்சரின் மிகசிறப்பான திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற இத்திட்டம் தற்போது பொதுபிரிவு, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, சிறப்பு கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து மற்றும் எறிபந்து போட்டிகள் (12.02.2023) முதல் (28.02.2023) வரை அண்ணா விளையாட்டரங்கம், ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் 5 பிரிவுகளிலும் 3,912 ஆண்கள் மற்றும் 1879 பெண்கள் என மொத்தம் 5791 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற 1783 வீரர் மற்றும் வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். முதல் இடம் மற்றும் மண்டல அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவதற்கு ரூ 11.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தனி மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற 1783 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, பொதுப்பிரிவில் வெற்றிபெற்ற 250 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4.99 இலட்சமும், அரசு ஊழியர்கள் பிரிவில் வெற்றிபெற்ற 169 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3.55 இலட்சமும், பள்ளிகளுக்கிடையேயான பிரிவில் வெற்றிபெற்ற 653 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.11 இலட்சமும், கல்லூரி பிரிவில் வெற்றி பெற்ற 641 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12.84 இலட்சமும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வெற்றிபெற்ற 70 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.1.46 இலட்சமும் என மொத்தம் 1783 நபர்களுக்கு ரூ.35.95 இலட்சம் மதிப்பிலான பதக்கம், பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.இராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.ஆண்டனி ஜோயல் பிரபு, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது....தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்ற போது முதல் கையெழுத்தாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு கையெழுத்திட்டார். இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து 6000 மாணவர்கள் பங்கேற்றார்கள். அதில் வெற்றி பெற்ற 2000 மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஒரு பகுதியாக இன்று 200 பேருக்கு மேடையில் விருது வழங்கப்பட்டுள்ளது. வருகிற இருபதாம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. அதன் பின்னர் திருச்சியில் முதல்வர் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக தேதி தருவார்.
திருச்சி மாநகராட்சியில் எல்லா இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டப்படிகள் முடிந்துவிட்டது இன்னும் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பாதாள சாக்கடை அமைக்கு பணி பாக்கி உள்ளது. காவிரி புதிய பாலத்துக்கு நிதி அனுமதி கோரி அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது அடிக்கல் நாட்டப்படும் என்றார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அத விடுங்க பார்த்துலாம் என கூறி விட்டு அமைச்சர் நேரு சென்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn