திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறும் மீன் வியாபாரிகள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறும் மீன் வியாபாரிகள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மற்றும் இறைச்சி மார்க்கெட்டை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது.

இதில் உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி அளித்தும், அங்கு மொத்த விற்பனை மட்டும் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாள்தோறும் மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்து வருகின்றனர். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்துக்கொண்டு மீன்களை வாங்கி செல்வதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையில் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வ.உ.சி சாலை வழியாக மிளகுபாறை செல்லும் சாலையில் மீன்களை வெட்டி பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

மேலும் அங்கு மீன் களை வெட்டும் தொழிலாளர்கள் மீன் கழிவுகளை சாலையோரம் போட்டு செல்வதால் அங்கு துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று பரவும் சூழல் உருவாகிறது. சாலை ஓரங்களில் கிடக்கும் கழிவுகளை தெருநாய்கள் இழுத்துச் செல்வதால் சாலை முழுவதும் மீன் கழிவுகள் காணப்படுகிறது. சில்லறை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில் மீன் மார்க்கெட்டில் சில்லறை விற்பனையால் பொதுமக்கள் அதிகளவு வருகின்றனர்.

இது மட்டுமின்றி இறைச்சிக் கழிவுகளை சாலை ஓரங்களிலோ, ஆற்றங்கரை ஓரங்களிலோ கொட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட் பகுதி சுற்றிலும் வெட்டப்படும் மீன் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF