ஜிகா வைரஸ் திருச்சிக்குள் வர விட மாட்டோம் எல்லையில் தீவிர கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

ஜிகா வைரஸ் திருச்சிக்குள் வர விட மாட்டோம் எல்லையில் தீவிர கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற மழைக்கால மற்றும் இதர மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மருத்துவம், சுகாதாரம், மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புர்டைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று (12.07.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை 
நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிப் பேசும் போது தெரிவித்ததாவது.. ஜிகா வைரஸ் (Zika Virus) ஆர்.என்.ஏ (RNA)  வகையைச் சார்ந்த வைரஸ் ஆகும். இவை ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) என்ற வகை கொசுக்களின் மூலமே ஏற்படுகிறது. ஜிகா 
வைரஸ் பாதிப்பு உள்ள ஏடிஸ் கொசு ஒருவரை கடிக்கும் பொழுது அந்த நபருக்கு ஒரு வாரம் கழித்தே அதிகப்படியான காய்ச்சல், உடலில் தடிப்பு, மூட்டுவலி, தலைவலி, உடல்வலி மற்றும் 
கண்கள் சிவந்து காணப்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்படுகிறது.

கருவுற்ற தாய்மார்கள் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால், குறைபாடுடன் கூடிய (சிறிய தலையுடன்) குழந்தை பிறக்க 
வாய்ப்புள்ளது. ஜிகா வைரஸ் நோய் தற்போது கேரளாவில் 18 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் கேரளாவில் இருந்து வரும் நபர்களை 2 வாரங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்க 
வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை அல்லது சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜிகா காய்ச்சலினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை. இக்காய்ச்சல் குறித்து தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இக்காய்ச்சலுக்கான அறிகுறி தெரிந்தவுடனே பொதுமக்கள் தாமதமில்லாமல் அருகிலுள்ள ஆரம்ப 
சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரத்தப் பரிசோதனையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்படின் பொதுமக்கள் மருத்துவரின் 
ஆலோசனை பெறாமல் மருந்துகடைகளிலோ, போலி மருத்துவர்களிடமோ சிகிச்சை பெறுவதைத் தவிர்த்திட வேண்டும்.

ஜிகா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்காக தற்காலிகமாக 670 டெங்கு மஸ்தூர் பணியாளர்களைக் கொண்டு கொசு ஒழிப்பு மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி சுகாதாரத்துறையுடனும் மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பணியாளர்களுடனும் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், 
பணியாளர்கள் முழு ஈடுபாட்டுடனும், விழிப்புணர்வுடனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்ரமணியன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமைன முதல்வர் டாக்டர் வனிதா, இணை இயக்குநர் டாக்டர் லட்சுமி, நகர நல 
அலுவலர் யாழினி மற்றும் சுகாதராம், மருத்துவத்துறை உள்ளிட்ட தொடர்புடைய 
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0