புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்களும் முடி தானம் செய்யலாம்

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்களும் முடி தானம் செய்யலாம்

சென்னை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தலைமுடியை தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருச்சி மாறுவோம் மாற்றுவோம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு முயற்சியை தொடங்கியுள்ளனர்.

இவ்அமைப்பை சேர்ந்த சிந்து கூறுகையில்.. புற்றுநோய் என்பது ஒரு சாபம் அல்லது குணப்படுத்த கூடிய நோய் ஆனால் இன்றளவும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி பார்க்கும் சூழ்நிலை இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவே இதை முன்னெடுத்துள்ளோம். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் சிகிச்சைக்கு முன்னர் மொட்டை அடிக்கப்படும்.

அது ஏன் நிகழ்கிறது? கீமோதெரபி மருந்துகள் வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் செல்களைத் தாக்கும் சக்தி வாய்ந்த மருந்துகள். துரதிர்ஷ்டவசமாக, இந்த மருந்துகள் உடலில் வேகமாக வளர்ந்து வரும் பிற உயிரணுக்களையும் தாக்குகின்றன - முடி வேர்கள் உட்பட கீமோதெரபி நம் உச்சந்தலையில் மட்டுமல்லாமல் - உடல் முழுவதும் முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடும்.

இதனாலேயே முதலில் மொட்டை அடிக்கப்படுகிறது. ஆனால் தன்னுடைய உருவ அமைப்பு மாறும் பொழுது அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை சூழ்ந்து விடுகிறது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாக சென்னை அடையார் மருத்துவமனையில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு உதவிட  சென்னையில் உள்ள செழியன் தொண்டு  நிறுவனத்தோடு இணைந்து இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதற்கு தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி குறிப்பாக ஆண்களிடம் முடி தானம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களும் இன்றைக்கு முடி தானம் செய்வதற்கு முன்வந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 53 நபர்கள் தற்போது முடிதானம் செய்துள்ளனர். இன்னும் பலர் கொடுப்பதற்காக முடியை வளர்த்து வருகின்றனர். முடிதானம் செய்ய விரும்பும் தன்னார்வலர்களுக்கு நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பிவிடும் வகையில் முகவரியை அனுப்புகிறோம். அப்படி இல்லை எனில் நாங்கள் அதனை பெற்றுக் கொண்டு மொத்தமாக அனுப்பி வைத்து கொண்டு இருக்கின்றோம்.

இதன் மூலம் தயாரிக்கப்படும் விக் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன்பாட்டிற்கு கொடுக்கப்படுகிறது. முடி தானம் செய்பவர்களுக்கு சான்றிதழ் அளித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றோம். நம்மால் முடிந்த சிறு உதவி கூட ஒருவரின் வாழ்வை மாற்றும் என்றால் உதவியானது  உதவிபெறும் மனிதனின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை கொடுக்கும் என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC