பெண் ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு

பெண் ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு

மாதவிடாய் காலத்தின் வலியை சகஜமாக எடுத்துக் கொண்டு தங்களின் அன்றாட பணிகளில் இயல்பாக ஈடுபடுவது பெண்களுக்கு பழகிப் போன ஒன்று தான் என்ற போதும் அச்சமயத்தில் ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பல பெண்கள் உண்டு. பிரபல ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனமான ஸ்விகி-யில் தினமும் உணவு விநியோகம் செய்யும் பணிகளை கவனித்து வரும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் மாதாந்திர விடுப்பு அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் டெலிவரி பிரதிநிதிகளாக பணிபுரிகின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளால் தான் பெரும்பாலான டெலிவரி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தான் பெண் டெலிவிரி பிரதிநிதிகளுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவித்துள்ளது என்று அந்நிறுவனத்தின் ஆபரேஷன் பிரிவு துணைத் தலைவர் மிஹிர் ஷா தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஸ்விகி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதற்காக மற்ற உணவகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் பங்க் நிலையங்களில் கழிவறையை தங்கள் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் உணவு டெலிவரி செய்யவும் அனுமதித்துள்ளது.

வேலைக்கு வந்தால் அனைவரும் சமம் என்ற வாதம் பொதுவான நியதியாக இருந்தாலும் பெண்களுக்கு பிரத்யேகமாக இருக்கக்கூடிய பிரச்னைகளுக்கான தீர்வை சலுகையாக அல்லாமல் உரிமையாக வழங்க வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். மகப்பேறு கால விடுப்பைக்கூட வழங்காமல் பல நிறுவனங்கள் பெண்களை வஞ்சிக்கும் வேளையில், ஸ்விகி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn