திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா - உற்சாக கொண்டாட்டம்

திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா - உற்சாக கொண்டாட்டம்

திருச்சியில் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு காவிரி நீர் பெருகி ஓட, கரைகளில் பெண்களிடம் மகிழ்ச்சி பெருகி ஓடியது நீரின் வல்லமையை உணர்த்துவதே ஆடி 18 எனும் ஆடிப்பெருக்கு விழா. ஆடியில் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட புதிய நீர் பொங்கி வரும். புது நீரை சுமந்து வரும் காவிரிக்கு நன்றி சொல்லும் வண்ணம் அதனை பெண்ணாய் பாவித்து மங்கள பொருட்களை வைத்து பூஜை செய்வர்.

ஆடி 18 அன்று புத்தாடை உடுத்தி காவிரி கரைக்கு வந்து தலைவாழை இலை போட்டு காப்பரிசி, கனிவர்க்கம், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கள பொருட்களை படையலிட்டு கற்பூர தீபாராதனை காட்டி காவிரி தாயை வணங்குவர். புpன்னர் ஓடும் நீரில் அதனை விட்டு காவிரி தாய்க்கு நன்றி செலுத்துவர். இத்தோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் புதுமண தம்பதிகள் தாலி பிரித்து மாற்றிக்கொள்வதோடு, திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மாலையை காவிரி ஆற்று நீரில் விட்டு வழிபடுவர்.

மேலும் சுமங்கலிகளும், இளம் பெண்களும் காவிரி தாயை வணங்கி மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வர். இவ்வாறு செய்தால் நீண்ட தாலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தனை சிறப்பு மிக்க ஆடிப்பெருக்கு விழா இன்று திருச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, ஓயாமாரி படித்துறை, கீதா நகர் படித்துறை ஆகிய படித்துறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வருகின்றனர்.

புதுமண தம்பதிகள் தாலி பிரித்து போட்டுக்கொண்ட பின்னர் தங்களின் திருமண மாலையை ஜோடியா ஓடும் காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வணங்கினர். இளம் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு மாங்கல்ய பாக்கியம் வேண்டி நின்றனர். திருமணமான பெண்களோ ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றி கட்டிக்கொண்டு மாங்கல்யம் நீண்டு நிலைக்க ஒருவரை ஒருவர் மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர்.

ஆடிபெருக்கை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி முக்கொம்பிற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 42 ஆயிரம் க.அடி நீரும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரும் செல்கிறது. இதனால் அனைத்து படித்துறைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு உதவியுடன் ஆற்றுக்குள்ளேயே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தடுப்பை தாண்டி குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுவதால் பெண்கள் இறங்க பயப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கென மறைவிடம் அமைக்கப்பட்டு குளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் அம்மாமண்டபத்தில் திரண்டு வருவதால் அம்மா மண்டபம் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. காலை முதலே கூட்டம் களை கட்டி உள்ள நிலையில், மாலை வரை மக்கள் திரண்டு கொண்டே இருப்பார்கள். இவ்வாறு காவிரியில் நீர் பெருகி ஒடுவதை போல கரைகளில் பெண்களிடம் மகிழ்ச்சி பெருகி ஓடியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision