மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா - அக்கட்சியிலிருந்து விலகிய முருகானந்தம் பேட்டி.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது.
கட்சிக்குள் ஜனநாயகம் காணமல் போய் சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது. கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார். சட்டமன்ற தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது தான் தோல்வி அடைய காரணம்.
எதற்காக நூறு இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை. கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமல்ஹாசனிடம் எழுப்பினேன் ஆனால் அவர் எதற்கும் பதில் கூறவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு காரணம் தலைமை தான். கமல் தன்னுடைய புகழுக்காக செயல்பட்டாரோ என்கிற சந்தேகம் அதிகமாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல,சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை.
தோல்வியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பி விட்டார். ஆனால் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் கமல்ஹாசன் தான். கமல் நேர்மையாக இருக்கிறாரா என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.
என்னுடன் சேர்ந்து கட்சியில் இன்னும் சில நிர்வாகிகளும் விலகி விட்டனர். வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள் என தெரிவித்தார். முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK