திருச்சியில் காற்று மாசின் அளவு 25% அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

திருச்சியில் காற்று மாசின் அளவு 25% அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டில் திருச்சியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் 25% அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இத்தரவானது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையம் (Center for Study of Science, Technology, and Policy (CSTEP)) பெங்களூரில் ஆகஸ்ட் 23 - 25 வரை நடத்திய மாசற்ற காற்றுக்கான இந்திய அளவிலான மாநாட்டில் பகிரப்பட்டுள்ளது. 2019 - 20 ஆம் ஆண்டில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான விவரப்பட்டியலின் (Emissions Inventory) அடிப்படையில் ஆய்வு ஒன்றை CSTEP மேற்கொண்டது.

இந்த ஆய்வில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால், தூத்துக்குடியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாசு வெளியேற்றம் தொடர்பான விவரப்பட்டியல் (Emissions Inventory) என்பது ஒரு ஆண்டு அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் காற்று மாசுபாடுகளின் அளவை, எங்கிருந்து வெளியேறுகிறது என்பதைச் சேர்த்து பட்டியலிடும் ஒரு தரவுத்தளமாகும். இந்தியாவின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்களுக்கான பட்டியலை CSTEP தயாரித்துள்ளது.

மேலும், ஆய்வின்படி சென்னையின் மாசு வெளியேற்றம் தூத்துக்குடியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போதுள்ளபடியே தொழிற் நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டு, சென்னையில் அதிகபட்சமாக 27 விழுக்காடும், திருச்சியில் 25 விழுக்காடும், மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் மாசு வெளியேற்றம் அதிகரிக்கும் என்று CSTEP ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையிலிருந்து திருச்சியில் 36 விழுக்காடும், மதுரையில் 27 விழுக்காடும், சென்னையில் 27 விழுக்காடும். தூத்துக்குடியில் 20 விழுக்காடும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் எத்திராஜன் கூறுகையில்....., "சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற நகரங்களில், காற்றின் தரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள காற்று மாசு அதிகமாக இருக்கும் (Non-Attainment Area Program (NAAP) நகரங்களில் PM10 காற்று மாசு நுண்துகள் அளவை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த இயக்கவியல் பற்றிய விரிவான புரிதலை நிறுவுவதும், மாசற்ற காற்றுக்கான பயனுள்ள உத்திகளை உருவாக்குவதும் எங்கள் குறிக்கோள்" எனக் குறிப்பிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision