அரசு உத்தரவை மீறி திருச்சியில் ஆம்புலன்சில் வைத்து மது விற்பனை

அரசு உத்தரவை மீறி திருச்சியில் ஆம்புலன்சில் வைத்து மது விற்பனை

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று திருச்சி மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. ஒரு சில கடைகளில் மட்டும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி திருச்சி மாநகரப் பகுதிக்கு உட்பட்ட பொன்மலை கம்பி கேட் பகுதியில் இரண்டு மதுபான கடைகள் உள்ளது. இந்த மதுபான கடைகளின் அருகில் அவசர ஊர்தி மூலம் இன்று சர்வ சாதாரணமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

150 ரூபாய் மதிப்புள்ள மதுபானம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை அரசு விலையில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மது விற்பனை செய்யப்படுவதை அறிந்த பொன்மலைப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் காவல்துறையினர் வருகையை அறிந்த மது விற்பனையாளர்கள் மது பாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவீரர் ஜெயந்தி விழா அன்று திருச்சி மாநகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவை மீறி பட்டப் பகலில் சர்வ சாதாரணமாக நடைபெறும் இந்த மது விற்பனை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn