அய்யனார் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

அய்யனார் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

 மணப்பாறை அடுத்த ஊனையூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் திருக்கோயில் பங்குனி உத்தர தேரோட்டம் இன்று  காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். 

 மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட ஊனையூரில்  ஊனையூர் வகையறா திருக்கோயில்களைச் சேர்ந்த ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழிபாட்டு தெய்வங்களாக ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார், பூரணி புஷ்பகலை அம்பாள், விஷ்வநாதர் – விசாலாட்சி, விநாயகர், அகோர வீரபத்திரர் முதலிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

இத்தலத்தில் வலது பக்கத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ நீலியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் ஆலயத் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் ஊர்முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெற்று, அதில் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் நாளான இன்று திருத்தேரில் ஸ்ரீ ஊனைக்காட்டு அய்யனார் உற்சவம் வைத்து அலங்கரித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரை மருங்காபுரி ஜமீன் சிவசண்முக பூச்சிய நாயக்கர்  வடம் பிடித்து இழுக்க அதனை தொடர்ந்து பொதுமக்கள் தேரை இழுத்தனர். 

திருத்தேரோட்டம் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பின் மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களின்  நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

இதில் ஊனையூரைச் சுற்றியுள்ள கொடும்பபட்டி, புதுப்பட்டி, கண்ணுக்குழி, திருநாடு, இலுப்பூர், தேனூர், பாலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அய்யனாரின் திருத்தேர் தரிசனம் பெற்றனர்.நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெய நீலா கலந்துகொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn