அமைச்சர்கள் வழக்குகளில் இருந்து விலகப்போவதில்லை ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!!
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மனைவி மீது விருதுநகர் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் விசாரித்து, அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து, கிரிமினல் ரிவிஷன் பெட்டிஷன் அடிப்படையில், தனித்தனி வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, 2 அமைச்சர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது சாத்துார் ராமச்சந்திரன் சார்பில் வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, 'கீழ்க்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என அறிவித்த ஐகோர்ட் நீதிபதியே வழக்கை விசாரித்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் எழுகிறது.
இதனால் விசாரணையில் இருந்து நீதிபதி விலக வேண்டும்' என்று வாதிட்டார். அதேபோல, அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் வக்கீல் ரமேஷ் ஆஜராகி, கோர்ட் தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்' என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், 'தலைமை நீதிபதியின் அனுமதி பெற்ற பின்னரே வழக்குகளை விசாரணைக்கு நான் எடுத்திருக்கிறேன். எனவே, எந்த வழக்கின் விசாரணையில் இருந்தும் நான் விலகப் போவதில்லை. நான் எடுத்த வழக்குகளில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை?' என்றார்.
சாத்துார் ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி உத்தரவிட்டார் ஆக தனது முடிவில் நீதிபதி தீர்க்கமாக இருப்பதால் ஆளும் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision