ஸ்ரீரங்கத்தில் மின்தடைப் பிரச்னைக்குத் தீர்வு - திட்ட அறிக்கை தயார்

ஸ்ரீரங்கத்தில் மின்தடைப் பிரச்னைக்குத் தீர்வு - திட்ட அறிக்கை தயார்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தைச் சுர்றிலும் உள்ள பகுதிகளுக்கு நிலத்தடி புதைவடக் கம்பிகள் மூலம் மின் விநியோகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு மின் விநியோக மற்றும் பகிர்மான நிறுவனம் தயார் செய்துள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலய திருவிழாக் காலங்களில் திருத்தேர் உலா நடைபெறும்போது மின்கம்பங்கள் வழியே செல்லும் மின்கம்பிகளில் தேர் உரசி விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு மின் விநியோகத்தை நிறுத்துவது வழக்கம். தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளும் தேரோட்டத்திற்குத் தடையாக இருந்து வந்தன. இதனால் தேரோட்டத்தின்போது பொதுமக்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து மின்கம்பங்கள் வழியே செல்லும் கம்பிகளுக்குப் பதிலாக நிலத்தடி (புதைவட) மின் கம்பிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி மின் வாரிய அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நான்கு சித்திரை வீதிகளில் 2.1 கிலோமீட்டர் நீளத்திற்கும் நான்கு உத்திர வீதிகளில் 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கும் புதைவடக் கம்பிகளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்பவனியின்போது மின்சாரத்தை நிறுத்தவேண்டிய அவசியமோ மின்கம்பிகளை அகற்றவேண்டிய அவசியமோ இருக்காது என்பதால் பொதுமக்களின் சிரமம் பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் மலைக்கோட்டையைச் சுற்றொயுள்ள பகுதிகளிலும் புதைவடக் கம்பிகள் மூலம் மின் விநியோகத்தை மேற்கொள்வது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே கண்டோன்மெண்ட் பகுதியில் புதைவட மின்கம்பிகள் பதிக்கப்பட்டு மின் விநியோகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision