202 நபர்களுக்கு பணி நியமன ஆணை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் இன்று (12.08.2023) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 202 நபர்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது : இன்று நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், எம்.ஆர்.எஃப், டி.வி.எஸ், ரிலையன்ஸ் ரீட்டைல், விஜய் மில்க், ஏ.பி.டி.மாருதி, அண்ணாமலை ஆட்டோ, ஆனந்த் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளிட்ட 155 தொழில் நிறுவனங்கள் வேலை நாடுநர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் பங்கேற்றனர். இம்முகாமில், படித்த, வேலை வாய்ப்பற்ற 1,661 ஆண்கள், 1,312 பெண்கள் என மொத்தம் 2,973 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 7 மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் உட்பட 202 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், 771 வேலை நாடுநர்கள் 2 ஆம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இலவச திறன் பயிற்சிக்கு 38 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வமுடன் கலந ;து கொண்டு தேர்வு பெற்று பணி ஆணை பெற்ற உங்களை வாழ்த்துகிறேன். முதலில் பணியில் சேர்பவர்களுக்கு தன்னார்வமும், தான் எந்த துறையில் திறமை படைத்தவர்களோ அதனை பயன்படுத்தவும் வேண்டும் என்பது மிக முக்கியம். அனைவருமே அரசு பணியில்தான் சேர வேண்டும் என்று விருப்பப்படுவது கொஞ்சம் சிரமமானதாகும்.
ஏனெனில் தமிழ்நாட்டிலுள்ள மொத்த அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 இலட்சம் ஆகும். நான் ஏற்கனவே 2 ஆண்டு காலம் வேலைவாய்ப்புத்துறையில் அமைச்சராக பணியாற்றியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர ; எண்ணிக்கை 50 இலட்சமாக இருந்தது. தற்பொழுது அது 1 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறது. அதேபோல நான் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் என 60,000 திற்கும் மேற்பட்டோருக்கு பணிகள் வழங்கினேன். இப்பொழுது அவ்வாறாக பணிநியமனம் செய்வதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. திருச்சி போன்ற மாவட்டங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் அனைத்து வசதிகளும் உடைய நகர்ப்புறங்களை நோக்கியே வேலை நாடுவோர் செல்கின்றனர். எனவே அந்த நிலையை மாற்றுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துரைத்து ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகிலேயே தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளும் திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் வாய்ப்புள்ளது. மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஏற்படக் கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக தேர ;வு நடத்தி அவர்கள் படித்த படிப்பிற்கு ஒரு மதிப்பெண், போட்டித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அந்தந்த மாவட்டத்திலேயே பணிநியமனம் நடைபெறுவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பேசியுள்ளோம். இனிவரும் காலங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஐ.மகாராணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மைய உதவி இயக்குநர் எஸ்.ரவிக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன், பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் அழகப்பா மோசஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5