சீன பிளாஸ்டிக் லைட்டர் உதிரிபாகங்களுக்குத் தடை - திருச்சி எம்.பி வரவேற்பு.

சீன பிளாஸ்டிக் லைட்டர் உதிரிபாகங்களுக்குத் தடை - திருச்சி எம்.பி வரவேற்பு.

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட முழுநேர தீப்பெட்டி ஆலைகளும், 400 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஆலைகள் பெரும்பாலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ளன.

இந்த மாவட்டங்களில் கடந்த 80 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தீப்பெட்டித் தொழில் வாழ்வளித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியாவின் 90 சதவீத தீப்பெட்டித் தேவையையும், உலக நாடுகளின் 40 சதவீத தீப்பெட்டித் தேவையையும், தமிழகத் தீப்பெட்டி நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்து வருகின்றன.

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித்தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. மிகக்குறைவாக ரூ. 5, ரூ. 7 ஆகிய விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதித்து, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கத்தால் உற்பத்தியாளர்கள் பெரும் நட்டத்தை சந்தித்தனர். சிறு, குறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் இதை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதித்தது.

இந்த சூழலில், இதுபற்றி கடந்த 21.04.2022 அன்று அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தேன். பிளாஸ்டிக் லைட்டர்களின் இறக்குமதியை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று கடந்த 09.12.2022 அன்று மாநிலங்களவையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குரல் எழுப்பினார். அதற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுபிரியா படேல் பதிலளிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களை இறக்குமதி செய்வதை உடனடியாகத் தடை செய்யக்கோரி தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்து 08.09.2022 தேதியிட்ட கடிதம் வந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் உதிரி பாகங்களுக்கு ஒன்றிய அரசு நேற்று (13.10.2024) தடை விதித்துள்ளது. இந்த தடைஉத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநகரம் நேற்று அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது .

இந்த அறிவிப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் என்பதிலும், இந்த தொழிலையே நம்பியுள்ள தீப்பெட்டி தொழிலாளிகளில் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை. இதற்காக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் வைகோ அவர்கள் முதன்முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று, வெற்றி பெற்ற தொகுதி, பல லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்களையும், உற்பத்தியாளர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கும் அன்றைய சிவகாசி இன்றைய விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி ஆகும். அந்த தீப்பெட்டி தொழிலாளர்களையும், உற்பத்தியாளர்களையும் பலமுறை நான் சந்தித்து பேசி உள்ளேன். அவர்களது பல கோரிக்கைகளை நம் தலைவர் இடத்திலும், அரசுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறேன். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், நான் தேர்ந்தெடுக்க தரப்பட்ட பல சின்னங்களில், தலைவர் அவர்கள் வேறொரு சின்னத்தை பரிந்துரைத்த போதிலும், நான் இந்த தீப்பெட்டி சின்னத்தைத் தான் தேர்ந்தெடுத்தேன். எனவே, “தீப்பெட்டி” நமது வாழ்வில் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம் என்பதாலும், தீப்பெட்டிக்கு ஆதரவாக ஒன்றிய அரசு வெளியிட்ட இன்றைய அறிவிப்பு எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்த தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision