திருச்சி மாநகரில் 4 கடைகளுக்கு சீல் வைத்த காவல் ஆணையர்
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்கள் நலனை காக்கவும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட,"போதை பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திடவும் புகையிலை பொருட்களினால் தயாரிக்கப்படும் போதை பொருட்களை விற்பளை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகர காவல் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு கூட்டு சோதனை (Combined Raid) மேற்க்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல்லிப், பான்மசாலா போன்ற குட்கா பொருட்களை பள்ளி அருகில் இருந்து கொண்டு விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களான திருச்சி மாநகரகம் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிமண்டப சாலையில் உள்ள தாரநல்லூரை சேர்ந்த கருப்பையா (55), த.பெ. முத்து என்பவரின் பெட்டி கடையிலும், தஞ்சாவூர் ரோட்டில் உள்ள சூசையப்ப பிள்ளை தெருவை சேர்ந்த செல்லதுரை (79), த.பெ.தங்கமணி என்பவரது டீ கடையிலும், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ தேவதானம் காவேரி ரோட்டில் மாரியப்பன் (53), த.பெ. சுப்பையா என்பவரின் டீ கடையிலும் மற்றும் பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர், ஹீபர்ரோட்டில் நடராஜன் (44), த.பெ. பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கடையிலும் குட்கா பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேற்படி கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து அவர்களது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த காரணத்தினால் மேற்படி கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவர் Dr.ரமேஷ்பாபு அறிவிப்பின் மூலம் காவல்துறை உதவியுடன் மேற்படி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள 2 கடைகள் மற்றும் கோட்டை, பாலக்கரை பகுதிகளில் தலா 1 கடைகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்களை பள்ளிக்கு அருகாமையில் விற்பனை செய்தமைக்காக மேற்கண்ட 4 கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தும், மேற்கண்ட கடைகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 2023 ஆண்டு இதுவரை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல்லிப், பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 615 வழக்குகள் பதிவு செய்தும், 621 எதிரிகளை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 14 லட்சம் மதிப்புள்ள 1390 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், குட்கா பொருட்களை எடுத்துவர பயன்படுத்திய 5 நான்கு சக்கரம், 3 இரண்டு சக்கரம் மற்றும் ஒரு மூன்று சக்கரம் என 9 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக இதுவரை 3 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கையொழுத்து இயக்கங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் என 1118 விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்க்கொள்ளப்பட்டு, இளைஞர்களுக்கு போதை பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கூல்லிப், பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தும், கடைகளை சீல் வைத்தும், உரிமத்தை ரத்து செய்யவும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision