ஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் எரியூட்டும் மாநகராட்சி நிர்வாகம்

May 15, 2021 - 07:30
 258
ஆற்றங்கரையோரம் கொட்டிய மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் எரியூட்டும் மாநகராட்சி நிர்வாகம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 940 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 10 பேர் பலியான நிலையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது. 5797 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளனர்.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்-ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை பெற்று
வருகின்றனர். தினமும் இம்மையத்தில் சேரும் நோயாளிகள், மருத்துவ குழுவினர் பயன்படுத்திய பாதுகாப்பு கவச உடைகள், முகக் கவசங்கள், கையுறைகள், ஊசி, மருந்து பாட்டில்கள் என ஒட்டுமொத்த மருத்துவ கழிவுகளும் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றங்கரையில் நாள்தோறும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ கழிவுகள் நாளுக்கு நாள் அதிகமாகி மலைபோல் குவிந்துள்ளது.

யாத்ரி நிவாஸ் அருகே குடிசைமாற்று குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் நோய்தொற்று அச்சத்திற்கு ஆளாகின்றனர். இந்த மையத்தில் சேரும் அனைத்து மருத்துவ கழிவுகளும் எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அப்படியே திறந்த வெளியில் கொட்டப்படுவதால் எதிரே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் இப்பகுதி மக்கள் பலமுறை எச்சரித்ததால் மருத்துவ கழிவுகளோடு குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர் இந்த அலட்சியப் போக்கினால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் கொள்ளிடம் ஆற்றையும், அப்பகுதி மக்களையும் பாதுகாக்க இங்கு சேரும் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். நோயிலிருந்து காப்பாற்ற சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd