திருச்சியில் காபி கடையில் திமுக, பாஜக கைகலப்பு - அடிதடி

திருச்சியில் காபி கடையில் திமுக, பாஜக கைகலப்பு - அடிதடி

திருச்சி பீமநகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் குருராஜன் என்பவருக்கு சொந்தமான மைசூர் காபி ஹவுஸ் எனும் காபி கடை உள்ளது. கடந்த சில நாட்களாக அவரால் கடையை சரிவர நடத்த முடியாததால் அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் கவுதம் என்பவரின் மச்சான் புருஷோத்தமன் என்பவருக்கு காபி கடையை கொடுத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் காபி கடையில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்த காபி ரூபாய் 12க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் விலை 25 சதவீதம் உயர்வு, காப்பித்தூள் 30 சதவீதம் உயர்வு, மின்சாரம் 25 சதவீதம் உயர்வு, கேஸ் 20 சதவீதம் உயர்வு என்ற காரணத்தினால் காபி 10 லிருந்து 2 ரூபாய் அதிகரித்து 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கடையை சுற்றி சிறிய அளவில் பதாகை வைத்திருந்தார். 

இதனையடுத்து இன்று காலை காபி கடைக்கு காபி குடிக்க வந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனின் உதவியாளர் சர்ச்சில் என்பவர் இந்த பதாகையை பார்த்துவிட்டு இது தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என கூறி கடையில் பணி செய்து கொண்டிருந்த பெண்களிடம் சண்டையிட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். 

மேலும் அங்கிருந்த மற்றொரு ஊழியரை சர்ச்சில் தாக்கியுள்ளார். இதனையடுத்து கடை ஊழியர்கள் உரிமையாளர் புருஷோத்தமனுக்கு தகவல் தெரிவிக்கவே அவர் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுடன் அங்கு வந்தார் அவரை பார்த்ததும் சர்ச்சில் அங்கிருந்து செல்ல முயன்றார். இதனையடுத்து சர்ச்சிலை புருஷோத்தமன் ஆட்கள் சாலையில் ஓட ஓட விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சர்ச்சில் மற்றும் திமுகவினர் அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் புருஷோத்தமன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தனர். புருசோத்தமன் தரப்பினர் சர்ச்சில் மீது புகார் அளித்தார். அமர்வு நீதிமன்ற போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு என்ன செய்வது என உயர் அதிகாரிகளிடம் பேசி வருகின்றனர். 

நடைபயணம் செல்லும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்சியில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision