திமுக நகர செயலாளரும், பேரூராட்சி தலைவர் மீது டால்மியா நிறுவனம் புகார்

திமுக நகர செயலாளரும், பேரூராட்சி தலைவர் மீது டால்மியா நிறுவனம் புகார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி திமுக நகர செயலாளரும், கல்லக்குடி பேரூராட்சித் தலைவருமான துரை என்ற பால்துரை கடந்த 17ம் தேதி இரவு அதே பகுதியில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் கம்பெனியில் மதுபோதையில் அத்துமீறி அவரது சகாக்களுடன் உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியும், பாதுகாப்பு காவலாளிகளையும், தாக்கியுள்ளது தொடர்பாக உரிய சிசிடிவி காட்சிகளுடன் கல்லக்குடி காவல் நிலையத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனம் புகார் அளித்துள்ளனர்.

இந்த டால்மியா சிமெண்ட் நிறுவனம் ஆனது 1939ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் இயங்கி வருகிறது. நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஒப்பந்த தொழிலாளர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த டால்மியா சிமெண்ட் ஆலையில் தற்போதைய கல்லக்குடி திமுக நகர செயலாளர் இவருக்கென தனியாக காண்ட்ராக்ட் வழங்க வேண்டும் எனவும், இவரது உறவினர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை டால்மியா சிமெண்ட் நிறுவனத்திடம் கேட்டு கொடுக்காததால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக டால்மியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கல்லக்குடி பேரூராட்சித் தலைவரும், கல்லக்குடி திமுக நகர செயலாளருமான பால் துறை டால்மியா நிறுவனத்துக்குள் உள்ளே புகுந்து பாதுகாப்பு காவலர்களையும், அலுவலக பொருட்களையும் அடுத்து நொறுக்கிய தொடர்பாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது... கடந்த (17.06.2023)ம் தேதி இரவு சுமார் 10:25 மணிக்கு எம்.எஸ் இன்டஸ்ட்ரியல் ப்ரெடெக்ஷன் சர்வீஸ் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஆபிசர் பாபு டால்மியா சிமெண்ட் கம்பெனியின் மெயின் கேட் பணியில் இருந்தார்.

அப்பொழுது கல்லக்குடி பேரூராட்சி தலைவரும், கல்லக்குடி திமுக நகர செயலாளருமான துரை என்ற பால்துரை, கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் பிரதான நுழைவு வாயிலில் மதுபோதையில் தங்களது இரு சக்கர வாகனங்களை கேட்டை மறித்து நிறுத்தி விட்டு, போத்துவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக சிமெண்ட் தரையில் அமர்ந்து கொண்டு டால்மியா நிறுவனத்தில் பணிபுரியும் உயரதிகாரி ஐ. சுப்பையா தகாத வார்த்தையால் கடுமையாக திட்டி உடனடியாக வரவழைக்குமாறு கூறினார்.

இவருடன் கல்லக்குடி பிச்சை டீ ஸ்டால் வைத்திருக்கும் ரமேஷ்னும் சேர்ந்து கம்பெனி பிரதான நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடியை, நாற்காலி மற்றும் கற்களால் தாக்கினார்கள். அதனைத் தடுக்க முயன்ற செக்யூரிட்டி பாபு மேல் இரும்பு நாற்காலியை வீசி கடுமையாக தாக்கி காயத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர் சுமார் 10:30 மணி அளவில் மெயின்கேட்டை உள்புறமாக திறந்து அத்துமீறி நுழைந்து டைம் ஆபீஸ் உள்ளே இருந்த பாதுகாப்பு கூம்பு மற்றும்

பிளாஸ்டிக் சங்கிலியை சேதப்படுத்தி அங்கு பணியில் இருந்த டால்மியா நிரந்தர தொழிலாளி அன்புமணி (நேரக்காப்பாளர்) தாக்கினார்கள். பின்னர் கம்பெனி செக்யூரிட்டி அலுவலகத்துக்குள் உட்புறமாக நுழைந்து கம்ப்யூட்டர் மற்றும் பிற பொருட்களை மேஜை மேல் இருந்து கீழே தள்ளி சேதப்படுத்தினார்கள். அதனைத் தடுக்க முயன்ற உதவி செக்யூரிட்டி அலுவலர் கே. கண்ணன், பால்துரை கையினால் முதுகில் தாக்கினார். மேலும் அவரைத் தகாத வார்த்தையால் கடுமையாக திட்டி கன்னத்தில் அடிக்க முயன்ற போது, அதனைத் தடுக்க முயன்ற மற்றொரு செக்யூரிட்டி ஏ. திருநாவுகரசு என்பவரது சட்டையை பிடித்து இழுந்து தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டி அவரை தாக்கினார். மேலும் அவர்கள் சுமார் இரவு 11 மணியளவில் கலைந்து செல்லும் போது செக்யூரிட்டியிடம் இனிமேல் தினமும் வந்து கம்பெனி நுழைவுவாயிலில் பிரச்சினை செய்வோம் என மிரட்டல் விடுத்தார்கள்.

மேலும் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது அத்துமீறி தாக்குதல் செய்தும், அவர்களை மிரட்டியும், இவர்கள் செய்த ஒழுங்கீன செயல்களால் எங்கள் தொழிலாளர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் எங்கள் நிறுவனத்தின் யூனியன் இது சம்மந்தமாக போராட்டம் செய்யயும் திட்டமிட்டுள்ளதால் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகி கொண்டு இருப்பதாலும், இவர்கள் செய்த அத்துமீறலை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து கள்ளக்குடி திமுக நகர செயலாளர் பேரூராட்சி தலைவருமான பால் துரையிடம் கேட்டபோது...... இரவு நேரத்தில் கம்பெனிக்கு போனப்ப என்ன நடந்தது எனத் தெரியவில்லை எனக் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn