கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் அரங்கேற்ற விழா

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில்  அரங்கேற்ற விழா

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டில் 26வது ஆண்டு விழா மற்றும் 22 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் செயலர் தந்தை அருள்பணி S.G.சாமிநாதன் அடிகள் தலைமை வகித்தார்.

திருச்சி மறைமாவட்ட தலைமைக்குருவும் கல்லூரியின் கல்விக்குழுத் தலைவருமான அருள்பணி L. அந்துவான் அடிகள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சியின் மேயர்  மு.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. நடராஜன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து கல்லூரியின் ஆண்டறிக்கை 2021-22 நூலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட முதல் படியினை கல்லூரி முதல்வரும் செயலரும் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து கல்வியாண்டின் சிறந்த மாணவர்கள், சிறந்த தலைமைத்துவ மாணவர்கள், சிறந்த நடனக்குழு மாணவர்கள், சிறந்த NSS தன்னார்வலர்கள், சிறந்த நூலகப் பயன்பாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தலைமை உரையாற்றிய அமைச்சர்... கலை பண்பாட்டுத் துறைக்கு கலைக் காவிரி மகுடாகத் திகழ்கிறது. எந்த நோக்கத்திற்காக S.M.ஜார்ஜ் அடிகள் தொடங்கினாரோ அந்த நோக்கத்தை இலக்காக கொண்டு சரியான திசையில் இயங்கிவருகிறது. சாதி சமய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அனைவருக்கும் கலையை கொண்டு சேர்த்து சமத்துவத்தைப் பேணிக்காத்திடும் கல்லூரியாகத் திகழ்கிறது. கலைத்துறையில் முதல் தலைமுறை கலைஞர்கள் பலரை தொடர்ந்து உருவாக்கி சமூக நீதிக்கு அடையாளமாய்த் திகழும் இக்கல்லூரி முத்தமிழறிஞர் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களை இக்கல்லூரிக்கு முதன்முதலில் நான் தான் அழைத்து வந்தேன்.

அதன் பிறகுதான் குறளோவியம் கண்ட கலைஞர் அவர்கள் கலைத்துறையில் சிறந்த விளங்கும் இக்கல்லூரிக்கு அரசு நிதியுதவி வழங்கி பேரவையில் அறிவித்தார்கள் என்றார். மாணவர்கள் நன்கு கற்று தமிழரின் கலைப் பண்பாட்டைப் போற்றிக் காத்திட வேண்டும் என்றார். தொடர்ந்து கடந்த மாதம் நடனத்துறை சார்பில் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழுடன் இணைந்து நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வு மலரை L. அந்துவான் அடிகள் வெளியிட முதல் படியை பிசப் ஈபர் கல்லூரியின் கணிதத்துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.

மீட்பின் காவியம் இரண்டாம் பதிப்பு நூலை கல்லூரியின் செயலர் வெளியிட முதல் படியை அருள்சகோதரி பெலிண்டா பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து இளங்கலை மூன்றாமாண்டு, ஒருங்கிணைந்த இளங்கலை, முதுகலை இரண்டாமாண்டு இசை, நடன மாணவர்களின் அரங்கேற்றம் நடைபெற்றது. பரதம், செவ்வியல் குரலிசை, வயலின், மிருதங்கம், வீணை,ஆகியத்துறை மாணவர்கள் அரங்கேற்றம் நடைபெற்றது. நிறைவாக குரலிசை உதவிப்பேராசிரியர் ராஜேஷ்பாபு நன்றிப் பண் பாடினார். நிகழ்வை தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ்குமார், மற்றும் நடனத்துறை உதவிப்பேராசிரியர் புவனேஸ்வரி தொகுத்து வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO