திருச்சியில் ஆசிரியர் மாணவர் இணைந்து மூன்று குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு "உலகக் குறுங்கோள்கள் தினம்"
சூரியக் குடும்பத்தில் சூரியன், 8 கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள் தவிர இன்னும் பல கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. எரிநட்சத்திரங்கள் (meteoroids), வால் நட்சத்திரங்கள் (comets), சிறுகோள்கள் அல்லது குறுங்கோள்கள்
( asteroids)போன்றவை. நெபுலாவில் கோள்கள் உருவாகும் போது விடப்படும் மீதமான பொருட்களே (remnants) குறுங்கோள்கள். அவற்றில் இருந்து தான் எரிநட்சத்திரங்கள் உருவாகின்றன. செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் இடையே நிறைய பாறை போன்ற பொருட்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இவையே ஆஸ்டிராய்டுகள் ( Asteroids) எனப்படும் குறுங்கோள்கள். சிறிய கற்களிலிருந்து பெரிய மலை போன்ற அளவிலும் இவை உள்ளன. இவற்றில் பூமிக்கு அருகிலிருந்து இயங்கும் குறுங்கோள்களும் (Near Earth Objects) உண்டு. இவை பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் குறிக்கிடும் போது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகின்றன. அளவில் சிறிதாக இருப்பவை வளிமண்டலத்திலுள்ள காற்றின் உராய்வினால் எரிந்து விடுகின்றன. ஆனால், அவை அளவில் பெரிதாக அமைந்து விட்டாலோ முழுவதும் எரிவற்கு முன்பே பூமியை அடைவதால், அவை பூமியைத் தாக்குகின்றன. இவை பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் (Potentially Hazardous Objects) என்போம்.
பூமியின் மீது ஒவ்வொரு நாளும் சுமார் 100 டன் எடை அளவு குறுங்கோள்கள் மோதுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, சிறு சிறு மணல் அளவு தான். இவையே பூமியின் வளிமண்டலத்தில் பாயும் போது, உராய்ந்து எரிநட்சத்திரமாகக் காட்சி தருகிறது. ஓர் ஆண்டில் சில தடவையேனும் சிறு கார் அளவுப் பாறை பூமியில் மோதி எரிந்து போகும். அதன் சிறு பகுதி, பூமியில் விழும். இதுதான் எரிகல். 1908 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி சைபீரியாவை பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் நினைவாக ஆண்டுதோறும் 'உலக குறுங்கோள் நாள்' கடைபிடிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படும் இந்நிகழ்வு உலக நாடுகள் சபையால் (United Nations) ஒப்புதல் அளிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட பல இடங்களில் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் குறுங்கோள்களைப் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்துகின்றனர். முதல் குறுங்கோள் 1801 ஆம் ஆண்டு கியூசிப்பி பியாஸி என்வரால் கண்டுபிடிக்கப்பட்டது. செரஸ் (Cres) எனப் பெயரிடப்பட்ட அவ்வான்பொருள் முதலில் கோளாகக் கருதப்பட்டு பின்னர் குள்ளக்கோளாக தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுபோல பல கோள்கள் கண்டுபிடிக்கப்பட யூரேனஸ் கோளைக் கண்டுபிடித்த வில்லியம் ஹெர்ஷல் இவறிற்கு ஆஸ்டிராய்டுகள் (Asteroids) எனப் பெயரிட்டார்.
பல ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் இந்தக் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நாசாவுடன் இணைந்து பல அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் உலக நாடுகள் அமைப்பு (IASC - International Asteroids Search Collaboration) Citizen Scientist Program மூலம் மாணவர்களையும் ஆர்வமுடைய பொதுமக்களையும் இதில் ஈடுபட அனுமதிக்கிறது. இதற்கான பயிற்சியை அளித்து அவர்கள் குறுங்கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
சென்ற மாதம் நடைபெற்ற பயிற்சியில் தமிழகத்திலிருந்து நான்குபேர்களைக் கொண்ட 'திருச்சி ஆஸ்ட்ரோ கிளப்' என்ற அணி மட்டுமே கலந்துகொண்டது. திருச்சி கே.கே. நகர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாலா பாரதியும், தூயவளனார் கல்லூரி முதலாமாண்டு இயற்பியல் துறை மாணவர் ஆழி முகிலனும் இணைந்து மூன்று குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பை அங்கீகரித்து நாசா சான்றிதழ் அளித்துள்ளது. திருச்சியிலிருந்து மூன்று குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு. தமிழகத்திலிருந்து மூன்று குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு ஆசிரியரும் மாணவரும் கண்டுபிடித்த மூன்று குறுங்கோள்கள்.
தற்போது திருச்சியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று குறுங்கோள்களுக்கும் BBM2101, BBM2102, BBM2103 எனத் தற்காலிக பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு செய்யப்பட இருக்கின்ற ஆய்வில் அவற்றின் அளவு, சுற்றுப்பாதை போன்றவை எல்லாம் ஆராயப்பட்டு கண்டுபிடித்தவர்கள் பரிந்துரை செய்யும் பெயர் வைக்கப்படும். 1861 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து ஒரு குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய மெட்ராஸிலிருந்து போக்ஸான் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள்தான் ஐரோப்பாவிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் குறுங்கோள், எனவே அது 'ஆசியா' எனப் பெயரிடப்பட்டது. அதுவரை ஐரோப்பா கண்டத்திலிருந்தே அதிகம் கண்டுபிடிப்பு நிகழ்ந்த நிலை மாறி இந்தியாவிலிருந்தும் நிறைய குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1988 ஆம் ஆண்டில் காவலூர் வான்ஆய்வகத்திலிருந்து இராஜாமோகன் என்பவரால் மூன்று குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு 'இராமானுஜன்' 'பட்டாழி' 'பென்னிஸ் நட்டார்' ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. குறுங்கோள்கள் கண்டுபிடிப்பில் மாணவர்களையும் ஈடுபடுத்தும் நோக்கில் திருச்சி ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC