திருச்சியில் 12ம் தேதி நாய்கள் கண்காட்சி - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

திருச்சியில் 12ம் தேதி நாய்கள் கண்காட்சி - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் (13.01.2023) முதல் தொடர்ந்து 45 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியினை கடந்த 26 நாட்களில் பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 23,652 பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

மேலும் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற (27.02.2023) திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளிட்ட 26 அரசுத்துறை அரங்குகளும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின் உள்ளிட்ட 8 அரசு சார்பு நிறுவனங்களின் என மொத்தம் 34 கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இப்பொருட்காட்சியில், குழந்தைகளுக்கென அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும ; நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், வருகின்ற (12.02.2023) அன்று பிற்பகல் 4.00 மணிக்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் “நாய்கள் கண்காட்சி” சிறப்பாக நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்க தலைவர், பொதுமக்களுக்கு "பிராணிகள் வதை தடுப்பு உறுதிமொழி ஏற்பு" செய்து வைக்கப்படும்.

உள்நாட்டின் வளர்ப்பு நாய்களில் ராஜபாளையம், சிப்பிபாறை உள்ளிட்டவையும் அயல்நாட்டினங்களான லாப்ரடார், கிரேட் டேன், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், பொமரேனியன் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்பட்டு, கால்நடை மருத்துவ குழுவினரால் ஆய்வு செய்து, காட்சிப்படுத்தப்பட்டும். இனத்தூய்மை, கீழ்படியும் திறன், பராமரிப்பு போன்ற பண்புகளின் அடிப்படையில், நடுவர்களால் தேர்வு செய்யப்படும். சிறந்த வளர்ப்பு நாய்க்கு முதல் பரிசும், மற்றும் ஒரு ஆறுதல் பரிசும் இனவாரியாக வழங்கப்படும்.

இக்கண்காட்சியின் ஒட்டு மொத்த தேர்வுக்கு ஒரு சிறப்பு பரிசும் உண்டு. நிகழ்ச்சியின் இறுதியில் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பிரிவின் சிறப்பு சாகச நிகழ்ச்சி நடைபெறும். பொதுமக்களுக்கு செல்ல பிராணிகள் வளர்ப்பு, விலங்குகள் நலன், விலங்குகள் வதை தடுப்பு மற்றும் விலங்குகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் இந்நிகழ்ச்சியின் நோக்கங்களாகும். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் உரிமையாளர்கள் (09-02-2023) முதல் பாலக்கரையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. அரசுப் பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை தந்து இப்பொருட்காட்சியினை கண்டுகளிக்கலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn