“ஒரே நாடு ஒரே தேர்தல்” அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவிற்கு துரை வைகோ எம்.பி கடும் எதிர்ப்பு.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவிற்கு துரை வைகோ எம்.பி கடும் எதிர்ப்பு.

அரசியலமைப்புச் சட்டம் (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா - 2024 என அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை ம.தி.மு.க கடுமையாக எதிர்க்கிறது. கேஸ்வானந்த பாரதி Vs கேரளா மாநிலம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 13 வது அமர்வு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 327ன் கீழ் தேர்தல்களை நடத்தியோ அல்லது சட்டங்களை கொண்டு வந்தோ கூட்டாட்சி போன்ற அடிப்படை அரசியலமைப்பு சட்டங்களை மீற நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் இல்லை. 

இந்த அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்புச் சட்டத்திற்கே மேலாதிக்கத்தை வழங்குகிறது, இதைச் சிதைக்கவே, பா.ஜ.க “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறையை சட்டமாக்க முயல்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இறையாண்மையை எந்தச் சூழலிலும் நாம் பாதுகாத்திட வேண்டும். இதைச் சிதைக்கும் வகையில் ஈடுபடும் பா.ஜ.கவை தொடர்ந்து அனுமதித்தால், அரசியலைப்புச் சட்டத்தின் முக்கிய அங்கமான மதச்சார்பின்மை, சமூகநீதி, நீதிமன்றத்தின் மேலாண்மை ஆகியவை ஆபத்தில் தள்ளப்படும். 

மேலும், இது ஒன்றிய அரசுக்கு மாநில சட்டமன்றங்கள் அடிமைப்படவேண்டிய நிலையை ஏற்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக பா.ஜ.க தனது சித்தாந்தத்தை நிறுவிடும் வகையில் தொடர்ந்து ஆட்சி செய்வதை ம.தி.மு.க வன்மையான கண்டிக்கிறது. கூட்டாட்சி முறை, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காதது போன்ற விமர்சனங்களை அப்பட்டமாகப் புறக்கணித்து, இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய நடவடிக்கை பொறுப்பற்ற அரசியல் சூதாட்டத்திற்கு ஒப்பானதாகும்.  

“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது கூட்டாட்சி முறையின் மீதான நேரடித் தாக்குதலாகும், இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்ப்பதற்கும், இந்திய அரசை சர்வாதிகார, ஒற்றையாட்சி அரசாக மாற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கே அடித்தளமிடும் என்பதை நான் திட்டவட்டமான கூற விரும்புகிறேன். 

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்."என்று பேசினார். 

அரசியலமைப்பு சட்டத்தை வடித்து தந்த டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களை அரசியல் சாசனத்தின் படி அமைந்திருக்கும் நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள திராணியற்ற உள்துறை அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் மீது வன்மத்தை கொட்டி இருப்பது பாஜகவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது.

எனவே, இந்தியா, சர்வாதிகார நாடாக மாற்றப்படுவதைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision