முட்டை மந்திரவாதி உதயநிதி ஸ்டாலின் - திருச்சியில் அண்ணாமலை பேச்சு

முட்டை மந்திரவாதி உதயநிதி ஸ்டாலின் - திருச்சியில் அண்ணாமலை பேச்சு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் சட்டசபை தொகுதிகள் அனைத்திலும் நடைபயண யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 ந்தேதி கரூரில் இந்த யாத்திரையை தொடங்கினார். பின்னர் கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் அண்ணாமலை தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக 100வது தொகுதியாக நேற்று திருச்சி ஸ்ரீரங்கம், பின்னர் திருவெறும்பூர் தொகுதியில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலை இன்று நடைபயணம் மேற்கொண்டார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபயணத்தை தொடங்கி அவர், உறையூர் கடைவீதி, சாலை ரோடு, கே.டி.திரையரங்கம் வழியாக, திருச்சி கிழக்கு தொகுதிக்குள்ளே நுழைந்தார். பின்னர் கோட்டை இரயில்வே மேம்பாலம், மலைக்கோட்டை வளைவு, தேவர் ஹால், யானை பம்ப், மரக்கடை, எம்.ஜி.ஆர் சிலை வழியாக காந்தி மார்க்கெட்டில் நடைபயணத்தை நிறைவு செய்தார். அண்ணாமலையின் மூன்றாவது கட்ட நடை பயணத்தினையொட்டி அவரை வரவேற்று திருச்சி மாநகரில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பாஜக கட்சி கொடிகள் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையிலான கட்சியின் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருச்சியில் தனது மூன்றாவது கட்ட நடை பயணத்தை அண்ணாமலை நிறைவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில்... கோயிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது. தமிழகத்தின் மற்ற தலைவர்கள் எங்கு இருக்க வேண்டும்?. பெரியார் சிலையை பொருத்தவரை பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். கோவில்களுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாசகங்களோடு இருக்கும் சிலையை உடைக்கமாட்டோம் அதை வேறு ஒரு பொது இடத்தில் வைப்போம் . திமுகவை பொறுத்தவரை அவர்களின் நாட்கள் எண்ணப்படுகின்றன. திமுகவின் திராவிட கருத்து என்பது ஒரு விஷ கருத்து. மதங்களைப் பிரித்து, ஜாதிகளை பிரித்து பிழைப்பு நடத்துவது என்பது, 70 ஆண்டுக்கால திராவிட அரசியல். நான் செல்லும் எல்லா இடங்களிலும் அவர்களை விமர்சனம் செய்கிறேன். புள்ளி விபரங்களுடன் பேசுகிறேன். பள்ளிக்கல்வித்துறை எப்படி இருக்கிறது? என்று ஆதாரங்களுடன் பேசுகிறேன். பாஜக எந்த மதத்திற்கு எதிரானது அல்ல. நானும் அப்படி தான். ஒவ்வொரு இந்துவும் கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். அதை, ஜனநாயக ரீதியில், 2026ம் ஆண்டு செய்து காட்டுவோம். 2026ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருமா? என்பதை, ஆர்எஸ் பாரதியும், கனிமொழியும் தங்களது காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அது கண்டிப்பாக நடக்கும் என அண்ணாமலை பேட்டியளித்தார்.

முன்னதாக மேடையில் பேசுகையில்..... கடுமையாக உழைக்கும் மக்களுக்கு வெகுமதி கொடுப்பது இந்தியர்களின் பழக்கம். 2014 ல் மோடி பிரதமராக ஆன போது பெரிய மாற்றத்தை விரும்பி மக்கள் பா.ஜ.க வை தேர்ந்தெடுத்தார்கள். பொதுவாக பா.ஜ.க பிரதமர் வேட்பாளரை அறிவிக்காது. ஆனால் 2014 ல் மோடி தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆட்சியார்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்ய மாட்டார்கள். ஆனால் மோடி எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் தாண்டி செயல்பட்டார். அதன் காரணமாக 2019 ல் மீண்டும் வெற்றி பெற்றார். அதே போல 2024 ல் 400 எம்.பிக்களோடு மோடி பிரதமராவார். 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வின் வளர்ச்சி 2 சதவீதம் தான். பா.ஜ.க ஆட்சி அமைந்த பின் 9 ஆண்டுகளில் தன் சொந்த காலில் நிற்க கூடிய நாடாகவும், உலக நாடுகளுக்கு உதவக் கூடிய நாடாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 11 வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5 வது இடத்திற்கு வந்துள்ளது. 

2027ல் மூன்றாவது பெரிய நாடாக உயர போகிறது. 2047 முடியும் போது உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும். ஊழல் இல்லாத, நாட்டுக்காக உழைக்கும் மனிதன் ஆட்சி பீடத்தில் அமரும் போது அது சாத்தியமாகிறது. பாஜக ஆட்சிக்கு நேர் எதிரான ஆட்சி தான் திமுக ஆட்சி. திமுக வினர் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து ஊழல் செய்து வருகிறார்கள். இது போன்ற ஆட்சியை தமிழ்நாடு பார்த்ததில்லை. மகனுக்கும் மருமகனுக்குமான ஆட்சியாக தி.மு.க ஆட்சி இருக்கிறது. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் சாதாரண மனிதர்கள். அவர்களுக்கு ஏழை மக்களின் கண்ணீர் தெரியும் அவர்களுக்காக உழைத்தார்கள். ஸ்டாலினின் ஒரே தகுதி கருணாநிதி யின் மகன் என்பது மட்டும் தான். அதே போல உதயநிதி க்கு ஸ்டாலினின் மகன் என்கிற தகுதி மட்டும் தான். ஏழை தாயின் மகன் என மோடி கூறியது போல் வேறு எந்த ஆட்சியாளராவது கூறிக்கொள்ள முடியுமா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா? வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா? தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 3லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியளித்தார்கள். அது குறித்து கேட்டால் பிரதமர் இந்தியை திணிக்கிறார் என சம்மதம் இல்லாமல் பேசுகிறார்கள். கும்மிடிப்பூண்டியை தாண்டி தமிழ் மொழியை செல்லாமல் வைத்திருந்தது தான் தி.மு.க. ஆனால் இன்று பிரதமர் மோடி ஐ.நா சபை வரை தமிழ் மொழியை கொண்டு சேர்த்துள்ளார். புதிய பாராளுமன்றத்தில் தமிழர்களின் பாரம்பரிய சின்னமான செங்கோலை பிரதமர் வைத்துள்ளார். புதிய கல்வி கொள்கையில் 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழி தமிழ் தான் பயிற்று மொழி என கூறப்பட்டுள்ளது. இனி பிரதமர் தமிழ் மொழியை இந்தியா மேல் திணிக்கிறார் என்று தான் தி.மு.க வினர் குற்றச்சாட்டு வைக்கமுடியும்.

தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு பிடித்த நான்கு ஐந்து தலைவர்களுக்கு மட்டும் போஸ்டர் ஒட்டி சிலை வைத்துள்ளார்கள். வ.வே.சு ஐயருக்கு திருச்சியில் சிலை இல்லை. இந்தி கட்டாய மொழி ஆக்கப்படும் போது அதற்கு எதிராக போராடிய கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை, தனது கடைசி காலத்தில் தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என கூறியுள்ளார். 1967 க்கு பிறகு நான்கு தலைவர்களது சிலைகள் தான் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை அசிங்கப்படுத்தியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாக இருக்கிறது. திருச்சியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனத்திற்காக ராஜ ராஜ சோழன் வெட்டினார். இன்று அது கழிவு வாய்க்காலாக மாறியுள்ளது. அந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறதா? 511 வாக்குறுதிகளில் 20யை கூட திமுக நிறைவேற்றவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வரும் பொழுது கோவிலுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாக்கியங்கள் இருக்க கூடிய பலகை இருக்காது என ஸ்ரீரங்கத்தில் பேசினேன். நம்முடைய வளர்ச்சி அரசியல், ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அரசியல், எல்லா மதமும் சம்மதம் என்கிற அரசியல். கோவிலுக்கு செல்லும் போது எல்லா மனிதர்களையும் கோவிலுக்குள்ளே அழைத்து சென்றவர்களது சிலைகள் வைக்கப்படும். மதுரையில் முத்துராமலிங்க தேவர், வைத்தியநாத ஐயர் ஆகியோரது சிலைகள் கோவில்களுக்கு வெளியே வைக்கப்படும். கோவில்களுக்கு வெளியே கடவுள் மறுப்பு வாக்கியங்கள் அடங்கிய சிலைகள், பொது இடத்தில் மாற்றி வைக்கப்படும். நாங்கள் சிலைகளை உடைக்க மாட்டோம். மனிதர்களை முன்னிலைப்படுத்தி தான் பா.ஜ.க ஆட்சி இருக்கும்.

திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி இருவரும் சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள். திருச்சி முன்னேற கூடாது என்பதில் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். மகேஷ் பொய்யாமொழி 90 விழுக்காடு உதயநிதியுடன் இருக்கிறார். 10 விழுக்காடு சினிமா நிகழ்ச்சிகளில் இருக்கிறார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11ஆயிரத்து 711 வகுப்பறைகள் குறைவாக இருப்பதாக 2022 ல் சி.ஏ.ஜி அறிக்கை கூறி உள்ளது. அந்த குழந்தைகள் மரத்தடியில், மேற்கூரை இல்லாத இடங்களில், ஆய்வகத்தில் அமர்ந்து படித்துவருகிறார்கள். தமிழகத்தில்ல18ஆயிரத்து 862 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த கட்டமாக குழந்தைகள் அரசு பள்ளிகளில் தோற்று கொண்டிருக்கிறார்கள். தி.மு.க அமைச்சர்களுக்கு கல்வி அறிவே கிடையாது. அவர்கள் குழந்தைகளிடம் சென்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்குகிறார்கள். இதையெல்லாம் மகேஷ் பார்ப்பதில்லை.

அதே போல அமைச்சர் கே.என்.நேரு மார்கெட்டையும், பேருந்து நிலையத்தையும் திருச்சி மாநகரின் வெளியே கொண்டு செல்ல முயற்சித்து வருகிறார். அதுவும் திமுகவினர் வாங்கி வைத்துள்ள இடங்களுக்கு அருகே கொண்டு செல்கிறார்கள். மாவட்டத்தின் வளர்ச்சியை கெடுப்பது தான் கே.என்.நேரு வின் சாதனை. மழை நீர் வடிகால் பணியை செய்யாமல் இருக்கிறார். திருச்சியில் ஜப்தி நடவடிக்கைக்காக சென்ற மண்டல துணை வட்டாட்சியரை கே.என்.நேருவின் வலது கரமான காஜமலை விஜய் மற்றும் 15 பேர் சென்று அடித்தார்கள். பா.ஜ.க போராட்டத்தை அறிவித்த பின் பேரளவில் வழக்கு பதிவு செய்தார்கள். உதயநிதி ஸ்டாலின் முட்டை மந்திரவாதி போல் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என சுற்றி வருகிறார். திருச்சியில் தி.மு.க ஆட்சி அமைந்தால் ஆட்டோ நகரம், பிற நகரம், மலைக்கோட்டையில் ரோப் கார் வசதி, உயர்மட்ட பாலம், மெட்ரோ திட்டம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. திமுக வினர் 511 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு வாயிலேயே வடைசுட்டு வருகிறார்கள். 2024 மற்றும் 2026 ல் மக்கள் பா.ஜ.க விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision