மிக மோசமான ஊழல் நிறைந்த துறை கல்வி துறை தான் என திருச்சியில் முன்னாள் நீதியரசர் பேச்சு

மிக மோசமான ஊழல் நிறைந்த துறை கல்வி துறை தான் என திருச்சியில் முன்னாள் நீதியரசர் பேச்சு

சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு மாநாடு திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் அரி பரந்தாமன் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் நீதியரசர் பேசுகையில்..... இது ஒரு வித்தியாசமான கூட்டமாக உள்ளது. இங்கு இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதுவே ஒரு அரிதான நிகழ்ச்சியாகும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் மூலமாக அரசு உதவி பெறும் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகள் தான் உண்மையான கல்வியாளர்கள்.

கல்வி வியாபாரிகள் தான் இந்தியாவில் பிரதானமாக இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து வித்தியாசமானவர்கள் இவர்கள். அப்போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது. பள்ளிக்கூடம் சிறப்பாக நடந்தது. ஆயிரம் ரூபாய் உதவி தொகை கிடையாது. பள்ளிக்கூடம் சிறப்பாக நடந்தது. காலை உணவு திட்டம் இல்லை, ஆனால் பள்ளிக்கூடம் சிறப்பாக நடந்தது. அப்படியானால் எப்போது இந்த பிரச்சனை ஆரம்பமானது என்பதை தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

அரசு பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஒன்றுதான். இரண்டு பள்ளிகளிலும் சம்பளம் தருவது அரசாங்கம் தான். அரசு பள்ளிகளுக்கு இணையாக சலுகைகள் எங்களுக்கும் கொடுங்கள் என கேட்கிறீர்கள். அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகள் ஏழைகளிலும் ஏழைகள்.

கடந்த 30 ஆண்டுகளில் எத்தனை உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள்? இடைநிலைப் பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளை இந்த அரசு திறந்துள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி என புதிது புதிதாக பள்ளிகள் தொடங்கப்படுகிறது. ஆக அரசு பள்ளிகளும் பலவீனமாக உள்ளது. டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் உள்ளிட்டோர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றனர்.

இப்போது என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளிட்டோர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர். தற்போது ஏழைகள் கூட தங்களது பிள்ளைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. 1990க்கு பிறகு நாம் எங்கு படிக்க வேண்டும் என்ற மனநிலையை கல்வி வியாபாரிகள் தீர்மானிக்கின்றனர். கல்வி ஒரு வியாபாரப் பொருளாக மாறி வருகிறது.

காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் வரை அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் பிரச்சனை இல்லாமல் செயல்பட்டு வந்தது. 1990க்கு பிறகு இவற்றில் சரிவு ஏற்பட்டது. புதிய கல்வி கொள்கையாளர்கள் வந்த பிறகு அவர்கள் சொல்வது தான் நடக்கிறது.அவர்கள் ஒரு எண்ணத்தை உருவாக்குகிறார்கள். அரசு பள்ளியில் படித்தால் உனக்கு புத்தி வராது, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தால் நன்றாக படிக்க மாட்டாய் என்ற ஒரு மனநிலையை ஏற்படுத்துகின்றனர்.

1991-92 சட்டப்பிரிவு 14a அனைத்திற்கும் காரணம். இந்தியா முழுவதும் புதிய பொருளாதார கொள்கை வந்த காலம். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளை கொல்லுவது தான் அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக கொண்டுவரப்பட்டது தான் சட்டப்பிரிவு 14 a ஆகும். பச்சையப்பன் போன்ற சமூக அலுவலர்கள் இப்போது முன்வந்து பல ஏக்கர் கொடுத்து கல்வி நிறுவனங்களை அமைக்கிறோம் என்று அரசாங்கத்தை கேட்டாலும், சுயநதி கல்லூரிகளை நடத்து என்பதுதான் அரசாங்கத்தின் கொள்கை

மிக மோசமான ஊழல் நிறைந்த worst corrupted துறை கல்வி துறை தான் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் பணி நியமனம் உள்ளிட்டவற்றுக்கு லட்சக்கணக்கான பணம் கேட்பதாக என்னிடம் சிலர் தெரிவிக்கின்றனர். நான் திமுகவையோ, அதிமுகவையோ சொல்லவில்லை. 1991 ஆம் ஆண்டு முதல் இதுதான் நிலைமையாக உள்ளது. 

அரசு உதவி பெறும் பள்ளிகளை மீட்பது என்பது மிகப்பெரிய பணி. பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் ஒன்றாய் சேர்ந்தால் ஓரளவு கதவையாவது தட்ட முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இதான் நிலைமை சட்டப்பிரிவு 14 a வை திருத்த வேண்டும், அதனை ரத்து செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision