திருச்சியில் இளைஞர் மர்ம மரணம் - பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த திருநங்கை கைது
திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பாஸ்கர் (29) என்பவர் டிப்ளமோ படித்துள்ளார். இவர் விராலிமலை பகுதியில் உள்ள (எம்.எம்.போர்ஜின்) கம்பெனியில் சூப்பர்வசைராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் கடந்த 6ம் தேதி இரவு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தை மன்னார்புரத்தில் நிறுத்தி கம்பெனி பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் மறுநாள் 7ம் தேதி காலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத கல்குவாரி செல்லும் பாதையில் இளைஞர் ஒருவர் தலை மற்றும் காது பகுதியில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து சாலையில் கிடந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கே.கே.நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் தொல்லை அதிகமாக இருந்த நிலையில், தற்போது அந்த பகுதியில் கொலை நடந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. மேலும் இளைஞர் ஆடை விலகிய நிலையில் சடலமாக கிடந்த இடத்தில் தடயங்களை போலீசார் கைப்பற்றி இருந்தனர்.
இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட்ட கைப்பேசி எண்கள் ஆராய்ந்து விசாரணையை தீவிர படுத்தினர். இதில் வண்ணாரப்புரத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற திருநங்கை செல்போன் எண் அங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து திருநங்கையை விசாரணை செய்வதற்காக தேடிய நிலையில் நேற்று பெங்களூரில் தனிப்படை போலீசார் திருநங்கையை கைது செய்து அழைத்து வந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்த பாஸ்கரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் கீழே தள்ளிவிட்டு கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்து விட்டதாக திருநங்கை வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட திருநங்கை வைஷ்ணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO