அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை!!
Advertisement
திருச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனினங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement
தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனினங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையை மீறி தடை செய்யப்பட்ட கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சம்பந்தப்பட்ட மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. மேலும் மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதாகெண்டை, புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்ளை வளர்க்கலாம். இவ்வகையான மீன்களை வளர்ப்பதற்கு மீன்வளத்துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படுகின்றன. திருச்சி, மீன்வள உதவி இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு மீன்வளர்ப்பில் உள்ள பல்வேறு திட்டங்களை அறிந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மீன்வள உதவி இயக்குநர்
எண்.4 காயிதே மில்லத் தெரு.
காஜா நகர், மன்னார்புரம்,
திருச்சி – 20 தொலைபேசி எண் 0431-2421173
மீன்வள ஆய்வாளர் - 9384824370.