மின்சாரம் தாக்கியதில் இதய துடிப்பு இல்லாத நிலையில் இருந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய திருச்சி அரசு மருத்துவர்

மின்சாரம் தாக்கியதில் இதய துடிப்பு இல்லாத நிலையில்  இருந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய திருச்சி அரசு மருத்துவர்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளுர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் தீபிகா (12). இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த போது மழைநீர் தேங்கியிருந்த தண்ணீரில் காலை வைத்துள்ளார். அப்போது மின்கம்ப எர்த் வயர் வழியாக மின்கசிவு ஏற்பட்டு அந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், மின்சாரம் தாக்கப்பட்ட சிறுமி தீபிகா துாக்கி வீசப்பட்டார்.  

அக்கம் பக்கத்தினர் அவரை மரக்கட்டை உதவியுடன் சிறுமியை அப்புறப்படுத்தி பார்த்த போது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தது. உடனே சிறுமியை தூக்கிக் கொண்டு பதறி அடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அரசு மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுமியின் நெஞ்சை கடுமையாக அமுக்கி சுவாசம் கொடுக்க முயற்சித்துள்ளனர். 

ஆனாலும் சிறுமி சலனமற்று கிடந்ததால், ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்தனர். டிஃபிபிரிலேட்டர் (Defibrillator) கருவியின் உதவியுடன் ஷாக் கொடுக்கப்பட்டது. 3 முறை ஷாக் கொடுக்கப்பட்டும் சிறுமியின் உடலில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்துள்ளது. மருத்துவ குழுவினர் நம்பிக்கை இழந்த நிலையில் டாக்டர் சரவணன் நம்பிக்கை தளராமல் 4, 5 வது முறை ஷாக் கொடுத்துள்ளார். ஆச்சர்யப்பட தக்க வகையில் சிறுமி மூச்சு விட ஆரம்பித்துள்ளார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு மூக்கு வழியாக நுரையீரல் ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினர் மயக்கவியல் மருத்துவர் பிரபாகரன். 

அதனை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் நின்றுப் போன இதயத்தை துடிக்க வைத்த லால்குடி அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரின் வியக்கதக்க சிகிச்சை, ஓட்டு மொத்த அரசு மருத்துவர்களையும் மனதார பாராட்டும் வகையில் இருக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn