25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் ஆசிரியர், மாணவர்கள் சந்திப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் நடத்திய 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர், மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் தலைமை ஆசிரியர் வி. சிதம்பரம்ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.கண்ணன், உதவி தலைமை ஆசிரியர் எம். விஜயகுமார் மற்றும் 1998 ஆம் ஆண்டு பள்ளியில் பணிபுரிந்த பல்வேறு முன்னாள் ஆசிரியர்கள் 1998 ஆம் ஆண்டு இப்பள்ளியில் படித்த மத்திய, மாநில அரசு மற்றும் பல்வேறு தனியார் துறையில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி பருவத்தை நினைவில் கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களின் நினைவுகளை முன்னாள் மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் மாணவர்கள் இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகளை பள்ளிக்கு செய்ய தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் உறவு சிறப்பாகவும், மதிப்புக்கு உரியதாகவும் அமைய இந்த முன்னாள் ஆசிரியர் - மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்றும், இது போல் நிகழ்ச்சி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற முயற்சி எடுப்பதாகவும் கூறினார்கள்.
முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களை நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 1998 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.