திருச்சி அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை

திருச்சி அரசு மருத்துவமனையில்   17 வயது சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை  - மருத்துவர்கள் சாதனை

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது மூட்டில் வீக்கம், மிகுந்த வலி ஏற்பட்டு அதனால் நடப்பதற்கு சிரமமாக இருந்து வந்துள்ளது. அவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 17/12/2021 அன்று எலும்பு முறிவு துறையில் சிகிச்சைக்கு வந்துள்ளார்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த பொழுது தொடை எலும்பில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சி.டி. ஸ்கேன்,எம்.ஆர்.ஐ உள்ளிட்ட உயர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் கட்டியில் இருந்து திசு எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் அவரின் தொடை எலும்பில் 15 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 15 சென்டிமீட்டர் அகலம் உடைய " ஆஸ்டியோ சார்கோமா"(Osteosarcoma)என்ற புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வளர் இளம் பருவத்தினரிடையே எலும்பில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளில் 0.2% இந்த ஆஸ்டியோ சார்கோமா வகையை சார்ந்தது. பொதுவாக இந்த வகையான எலும்பு புற்றுநோய் கட்டி கண்டறியப்பட்டால் அவர்களை சென்னை போன்ற உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை உள்ள ஊர்களுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்து வந்துள்ளனர். மேலும் தொடைப்பகுதியுடன் கால் துண்டித்தல் அறுவை சிகிச்சை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது . 

இந்த நிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் K. வனிதா அவர்களின் வழிகட்டுதல் படி எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் K.கல்யாணசுந்தரம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவர் பேராசிரியர் R.வசந்த ராமன் அவர்களின் தலைமையில் உதவிப் பேராசிரியர்கள் மருத்துவர்கள் G.ரமேஷ் பிரபு ,R. ராபர்ட்,R. கோகுலகிருஷ்ணன் ஆகியோருடன் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் P. செந்தில்குமார் மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் சிவக்குமார் குழுவினருடன் இணைந்து தொடர்ந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையில் எலும்பு புற்றுநோய் கட்டியை அகற்றி,பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை மூட்டு உபகரணத்தை உட்பொருத்தினர்.

 இதனால் நோயாளிக்கு கால் துண்டிக்காமல் பாதுகாக்கப்பட்டதுடன் அதன் முழு செயல்திறனும் இயல்பு போலவே மீட்கப்பட்டது. 4 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு கிடைக்கும் வகையிலும் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காகவும் சிறப்பு எலும்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.எலும்பில் புற்றுநோய் கட்டி என்று உறுதி செய்யப்பட்டவுடன் நோயாளிக்கு செயற்கை மூட்டு உபகரணம் உருவாக்க தேவையான அளவினை கதிரியக்க துறைத்தலைவர் மருத்துவர் செந்தில் வேல் முருகன் தலைமையிலான குழுவினர் சிடி ஸ்கேன் உதவியுடன் அளவீட்டு தந்தது இந்த அறுவை சிகிச்சைக்கு பெரிதும் உதவியது.

மேலும், இந்த சிகிச்சையின் தொடக்கத்தில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை இணைப் பேராசிரியர் மருத்துவர் S.சுரேஷ்குமார் மாதம் ஒருமுறை மூன்று மாதங்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளை ஊசி வழியே செலுத்தி சிகிச்சையைத் தொடங்கினார் அதுபோல அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் மாதம் ஒரு முறை மூன்று மாதங்களுக்கு அவருக்கு புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் அறுவை சிகிச்சை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO