வாகன ஓட்டிகள் நலனுக்காக களமிறங்கிய திருச்சி போக்குவரத்து போலீசார்
திருச்சி மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதி மற்றும் பிரதான சாலைகளில் ராட்சதக் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் நேற்று முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சேரும் சகதியமாக காட்சியளித்த சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக மோசமாக நிலையில் காட்சியளிக்கிறது.
குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. இந்த பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த மோசமான சாலையில் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த திருச்சி கண்டோண்மென்ட் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் காவலர்கள் இளங்கோவன், ஜீவானந்தம், வினோத், ஜான் ஆகியோர் உடனடியாக ஜல்லி கற்களை கொண்டு வந்து மோசமான பள்ளத்தில் கொட்டி சாலையை சீரமைத்தனர்.
அப்போதே அவ்வழியாக சென்ற கார் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் சாலையை சீரமைத்த போலீசாருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். காவல்துறையின் இத்தகைய செயலால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி அந்த சாலையில் பயணித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO