திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைத்து இளைஞர்களின் கனவாகும். இன்றைய காலகட்டத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றால் தான் அரசு வேலை என்ற நிலை உருவாகியுள்ளது. அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை இந்நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் கூட எட்டாக்கனி தான்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமின்றி கடந்த மே மாதம் தொடங்கிய பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கொரானா காலத்தில் கூட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது சமூக இடைவெளிகளை பின்பற்றி ஒரு வகுப்பிற்கு 60 மாணவர்கள் என காலை, மாலை என இரு பிரிவுகள் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது டிஎன்பிசி குரூப் 2 வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து படிக்க இயலாதவர்களுக்கு உதவும் வகையிலேயே அனைத்து தொகுதிகளிலும் ஊராட்சி மன்றங்களில் தன்னார்வ பயில்வட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்வுகள் அறிவிக்கப்படும் நிலையில ஊராட்சி மன்றங்களிலும் வகுப்புகள் நடைபெறும். இது குறித்து பேசிய திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன், இங்கு வரும் இளைஞர்களுக்கு கட்டணம் அவசியமில்லை , தன்னம்பிக்கையும் ஆர்வமும் இருந்தால் இப்பயிற்சியை நன்றாக பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெறலாம். தேர்வுக்கு முழுமையாக தயார்ப்படுத்தும் வகையிலேயே பாடங்கள் எடுக்கப்படுகின்றன என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU