திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து பலூன் வியாபாரி கைது

திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து பலூன் வியாபாரி கைது

திருச்சி மெயின்கார்ட்கேட் அருகே போத்தீஸ் துணிக்கடை முன்பு  இருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து உத்தர பிரதேசமத்தைச் சேர்ந்த அனார் சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 08.30 மணி அளவில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலிண்டர் அருகே நின்ற கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் கரட்டான் காடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்ற மாட்டு ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் வரகனேரி பகுதியை சேர்ந்த மன்சூர் என்பவரின் ஆட்டோ முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது ஜீவானந்தம் பள்ளி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிங்காரத்தோப்பு தனியார் மருத்துவமனையில் 7 பெண்கள், மூன்று குழந்தைகள், ஐந்து ஆண்கள் உட்பட 15 நபர்களும், பாபு ரோடு தனியார் மருத்துவமனையில் பிரபாகரன் (36), மகேஷ் (21), சிவாஜி (28) உள்ளிட்ட மூவரும், அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சில்வியா(23), பிரியா(22), கவியரசு(26), ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அனார் சிங்(31) என்ற வட மாநில பலூன் வியாபாரியை தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து, விபத்து குறித்து கேட்டறிந்தார். 

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்.., 13 வயது பையன் மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இது போன்ற ஹீலியம் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் இது போல் யாரேனும் உரிய அனுமதி இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் உயிரிழந்த ரவி மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் முற்றிலும் விபத்து மட்டுமே வேறு ஏதேனும் சதி நடைபெறவில்லை எனக் கூறினார்.

இந்நிலையில் தலைமறைவான பலூன் வியாபாரி அனார் சிங்கை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது கவனக்குறைவு அஜாக்கிரதை, மனித உயிருக்கு பங்கம் ஏற்படுத்தும், வகையிலும் மனித உடலுக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் ஹீலியம் கேஸ் பலூன் விற்பனை செய்து கொண்ட போது சிலிண்டர் வெடித்தது எதிர்பாராமல் நடந்ததா அல்லது குற்ற வழக்கில் தொடர்புடைய ரவிக்குமார் என்ற மாற்று ரவி விபத்தை ஏற்படுத்தினாரா இதற்கான காரணம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO