கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறதா? போதை பொருள் கடத்தல் வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியில் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது சோழமாதேவியை சேர்ந்த அசரப்அலி (49) என்பவர் வீட்டில் இருந்து சுமார் 182 கிலோ எடையுள்ள ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். அவரிடம் விசாரணை செய்தபோது தஞ்சை பாபநாசம் அருகே உள்ள பசுபதி கோவிலை சேர்ந்த விக்னேஸ்வரன் (33) என்பவரிடமிருந்து வாங்கி வந்து இந்த பகுதியில் சில்லறை வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து விக்னேஸ்வரனையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரண்டு செல்போன்கள் மற்றும் 28 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நவல்பட்டு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி கைது செய்யப்பட்ட இருவரில் விக்னேஸ்வரன் என்பவர் பிரபல செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தி ஆசிரியரின் சகோதரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விக்னேஸ்வரனை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு போலீசாருக்கும் இந்தச் செய்தியை வெளியிடாமல் இருப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஸ்வரனின் வங்கி கணக்கை முடக்கி உள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வங்கி கணக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் பெரிய இலக்கங்களில் வங்கி பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிக முக்கியமாக யாரெல்லாம் இவருக்கு பணப்பரிவர்த்தனைகள் செய்தார்கள் என்பது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை விசாரித்து வருகிறது. விசாரணையில் ஊருக்கெல்லாம் நியாயம் பேசும் நான்காவது தூணின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு பிளாக்மெயில் ஜனர்லிசம் செய்துவரும் சிலரது திரைமறைவு பேரங்கள் உள்ளிட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்காவது தூணான பத்திரிகைத்துறையின் மாண்பு இந்த வழக்கோடு தொடர்புடைய ஒருசிலரால் சிதைந்துவிடக்கூடாது என்பதால், வழக்கை மிகவும் கவனத்தோடு கையாண்டு வருவதாகவும், அதேசமயம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision