திருச்சியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திட தண்டோரா மூலம் வலியுறுத்திய கே.கள்ளிக்குடி ஊராட்சி

திருச்சியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திட தண்டோரா மூலம் வலியுறுத்திய கே.கள்ளிக்குடி ஊராட்சி

பள்ளிகளில் 2021- 22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ஜூன் 14-ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், கே.கள்ளிக்குடி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியாக பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெருத்தெருவாக தண்டோரா போட்டு மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி உள்ளனர்.

இன்று காலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மணிகண்டம் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் மற்றும் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பிறகு பெற்றோர்களிடம் இந்த 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான  விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பும் பாடங்களை பார்க்க அறிவுறுத்தப்பட்டது. கே.கள்ளிக்குடி  ஊராட்சி மன்ற நடுநிலைப்பள்ளியில் சிறந்த முறையில் கல்வி அளிப்பதோடு, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வியும் யோகா, சிலம்பம் போன்ற கலை பயிற்சிகளும் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி கணினி பயிற்சி, தொடுதிரை போன்ற பல சிறப்பு தொழில்நுட்பத்தோடு இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்திட  வேண்டும் என்பதை வலியுறுத்தி தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் ஏற்பாடு செய்திருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF