4 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை - காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

4 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை - காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான திருச்சி காவேரி மருத்துவமனை பிறந்து 4 மாதங்களே ஆன ஒரு கைக்குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. திருச்சி மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கைக்குழந்தைக்கு இத்தகைய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று கருதப்படுகிறது. வயிறு வீக்க பிரச்சனைகளோடு இக்கைக்குழந்தை (வீக்கமடைந்த கல்லீரல் மற்றும் மண்ணீரலின் காரணமாக 2 மாத வயதில்) மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டது.

இக்குழந்தைக்கு செய்யப்பட்ட முழுமையான பரிசோதனையில், இயல்புக்கு மாறாக எலும்புகள் வளர்வதை விளைவிக்கிற மற்றும் அளவுக்கு அதிகமாக அடர்த்தியுள்ளதாக அவற்றை ஆக்குகிற ஒரு அரிதான மரபியல் கோளாறு குழந்தைக்கு இருப்பது கண்டறியப்பட்டது. நரம்பு ஒடுக்கம், பார்வைத்திறன் குறைபாடு, மூளையில் திரவத்தேக்கம் மற்றும் குறைந்திருக்கும் இரத்த அணு எண்ணிக்கை மற்றும் வீங்கியிருக்கும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கும், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் உயிரிழப்பையும் இது ஏற்படுத்தும்,

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர், செயல் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை துறையின் தலைவருமானடாக்டர். D.செங்குட்டுவன் . இச்சிகிச்சை குறித்து கூறியதாவது.... இக்கைக்குழந்தையின் பெற்றோர்கள் ஏற்கனவே இதே மாதிரியான எலும்பு தடிமன் பாதிப்பு நிலையின் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளை ஏற்கனவே இழந்திருந்த வரலாறு இருப்பதை எமது மருத்துவ நிபுணர்களது குழு கண்டறிந்தது. எலும்பு மஜ்ஜை தானமளிப்பதற்காக இக்குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தானமளிப்பவரை அடையாளம் காண்பதற்கான செயல்முறை விரைவிலேயே தொடங்கப்பட்டது. இக்குழந்தையின் உடன்பிறப்பான 2 ஆண்டுகள் வயதுள்ள ஆரோக்கியமான குழந்தை நிகரான HLA உடன் பொருத்தமான தானமளிப்பு நபராக அடையாளம் காணப்பட்டது.

அதன்பிறகு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (BMT) பிரிவுக்கு இக்கைக்குழந்தை மாற்றப்பட்டது. அங்கு கீமோதெரபி மருந்துகள் வழங்கப்பட்டதற்குப் பிறகு தானமளித்த உடன்பிறப்பிடமிருந்து சேகரிக்கப்பட்டிருந்த ஸ்டெம்செல்கள், பாதிக்கப்பட்டிருந்த இந்த நான்கு மாத குழந்தைக்கு செலுத்தப்பட்டன. இந்த மாற்று சிகிச்சைக்கு பிந்தைய காலகட்டத்தில் தொற்று பரவாத பாதுகாப்பான சூழலில் இக்கைக்குழந்தை வைக்கப்பட்டிருந்தது. இதுவே இந்த சிகிச்சை செயல்முறையின் மிக முக்கியமான காலமாகும். மாற்று சிகிச்சைக்கு பிந்தைய காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எமது மருத்துவ நிபுணர்கள் சாதுர்யமாகவும், திறம்படவும் . கையாண்டனர். தேவைப்படும் போதெல்லாம் இக்குழந்தைக்கு இரத்தம் ஏற்றப்பட்டது அதன் பிறகு செய்யப்பட்ட சோதனைகள், இக்கைக்குழந்தைக்கு புதிதாக செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் வெற்றிகரமாக உடலில் சேர்ந்திருக்கின்றன மற்றும் இக்குழந்தை நலமுடன் தேறி வருவதை வெளிப்படுத்தின.

திருச்சி, காவேரி மருத்துவமனையின், குழந்தைப் பருவ இரத்தவியல் புற்றுநோயியல் மற்றும் எலும்பு மஜ்ஜை உறுப்பு மாற்று மருத்துவர் டாக்டர். வினோத் குணசேகரன் இச்சிகிச்சையின் வெற்றி குறித்து பேசுகையில், கைக்குழந்தைகளுக்கு செய்யப்படும் உறுப்பு மாற்று செயல்முறைகள் அதிக சிக்கலானவை, சவால்மிக்கவை. இந்த குறிப்பிட்ட நேர்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இக்கைக்குழந்தையின் எடை ஏறக்குறைய 4.5 கிலோகிராமாக இருந்தது. விரிவடைந்த வயிறு பாதிப்பு நிலையானது இதன் சுவாசிப்பு மற்றும் உணவருந்தலில் பிரச்சனையை எதிர்கொள்ளுமாறு செய்திருந்தது, இருப்பினும், தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் மருந்துகளின் மூலம் இப்பாதிப்பு அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2 வயதே ஆன தானமளிக்கும் குழந்தையிடமிருந்து ஸ்டெம் செல்களை சேகரிப்பது நாங்கள் எதிர்கொண்ட மற்றொரு முக்கிய சவாலாகும். இதுவும் வெற்றிகரமானதாக மேற்கொள்ளப்பட்டது. உயிருக்கு ஆபத்தான இந்த அரிதான நோயை சரியாக, உரிய காலஅளவிலேயே கண்டறிந்ததற்கும் மற்றும் இக்கைக்குழந்தையின் சிகிச்சைக்கு இங்கு கிடைக்கப்பெறும் மிக நவீன கட்டமைப்பு வசதிகளை சரியாக பயன்படுத்தியதற்காகவும் டாக்டர், N. வெங்கடேஷ்வரன் (குழந்தை நல மருத்துவர்) இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

இக்குழந்தையின் சிகிச்சை காலம் முழுவதிலும் அதன் குடும்பத்தினருக்கு ஆதரவும், நம்பிக்கையும் வழங்கிய காவேரி மருத்துவமனையின் ஒட்டுமொத்த மருத்துவ குழுவினரையும் நான் பாராட்டுகிறேன் என்று கூறினார். இந்த கைக்குழந்தையும் மற்றும் அதற்கு எலும்பு மஜ்ஜையை தானமாக அளித்த அதன் உடன்பிறப்பும் எவ்வித சிக்கல்கள் இன்றி குணமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து அவர்களது வீட்டிற்கு நலமுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO