மருத்துவமனை அருகே கழிவுநீர் தேங்கியதை கண்டித்து லெனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே நாகமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கியதால் தனியார் மருத்துவமனைக்கு வரும் மக்கள் அவதிப்படுவதை கண்டித்து லெனின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லெனின் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மணிகண்டம் ஒன்றிய அமைப்பாளர் சின்னையா முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலத்தில் தனியார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு முன்பு கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் வடிகால் இல்லாத காரணத்தால் கழிவு நீர் பல மாதங்களாக சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்க்கு சிகிச்சை பெற அந்த தனியார் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பிச் செல்லும் போது புதிதாக தொற்று நோயுடன் செல்லும் வகையில் இந்த கழிவு நீர் அந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இந்த சாலை உள்ளது. அதனால் இந்த கழிவு நீர் பிரச்சனைக்கு ஆணையம்தான் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் அலட்சியமாக பதில் கூறப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் இறப்பவர்களின் உடலை சுடுகாட்டிற்கு இந்த கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. ஆகையால் திருச்சி மாவட்ட ஆட்சியர், மணிகண்டம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக பல மாதங்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கள்ளிக்குடி பஞ்சாயத்து மட்டப்பாறைப்பட்டி மயானத்திற்கு தார் சாலை அமைத்து தரவேண்டும்.அதே மாயானத்தில் அடிபம்பு அமைத்து தர வேண்டும். தெற்கு பாகனூர் செல்லும் சாலையில் தெருவிளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். நாகமங்கலத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு உழவர் சந்தை அமைத்து தர வேண்டும். நேருஜி நகர், காந்தி நகர், அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், நாராயணபுரத்தில் வாழும் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision